கடந்த 1975ஆம் ஆண்டு, ஜூன் 25ஆம் தேதி, நள்ளிரவில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆலோசனையின் பேரில், அப்போதைய குடியரசு தலைவர் ஃபக்ருதீன் அலி அகமது இந்தியாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். இந்த அறிவிப்பு மார்ச் 21, 1977 வரை அமலில் இருந்தது.
அவசரநிலை பற்றி நினைவுகூர்ந்த லாலு பிரசாத்:
அவசர நிலை காலத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். ஊடகங்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவசர நிலை அமல்படுத்தப்பட்டதை நினைவுகூரும் விதமாக நாடாளுமன்றத்தில் மூன்று நாள்களுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு இந்தியா கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், அவசரநிலை குறித்து மனம் திறந்த பிகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், இந்திரா காந்தி தங்களை சிறையில் அடைத்ததாகவும் ஆனால் கொடுமைப்படுத்தவில்லை என கூறியுள்ளார்.
தற்போது, இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் அவசரநிலை காலத்தில் இந்திரா காந்தியின் காங்கிரஸ் கட்சியை கடுமையாக எதிர்த்தவர் லாலு பிரசாத். இவர் உள்பட ஜனதா கட்சியை சேர்ந்த நிதிஷ் குமார், மறைந்த சரத் யாதவ், முலாயம் சிங் யாதவ் உள்பட பலர் அந்த சமயத்தில் கைது செய்யப்பட்டனர்.
"சுதந்திரத்தின் விழுமியத்தை பற்றி பாடம் எடுக்கும் பாஜக"
எமர்ஜென்சி காலத்தில் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்ட லாலு பிரசாத், "அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட அவசரநிலை அத்துமீறலுக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல ஜெயப்பிரகாஷ் நாராயண் அமைத்த வழிநடத்தல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக நான் இருந்தேன்.
நான் 15 மாதங்களுக்கும் மேலாக பாதுகாப்புச் சட்டத்தின் (MISA) கீழ் சிறையில் இருந்தேன். இன்று எமர்ஜென்சி பற்றி பேசும் பாஜக அமைச்சர்கள் பலரை எனக்கும் எனது சகாக்களுக்கும் தெரியாது. மோடி, ஜே. பி. நட்டா மற்றும் தற்போது இருக்கும் மற்ற அமைச்சர்களை பற்றி எமர்ஜென்சியின்போது, நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. அவர்கள் இன்று நமக்கு சுதந்திரத்தின் விழுமியத்தை பற்றி பாடம் எடுக்கிறார்கள்.
இந்திரா காந்தி எங்களில் பலரை சிறையில் அடைத்தார். ஆனால் அவர் எங்களை ஒருபோதும் கொடுமைப்படுத்தியதில்லை. அவரோ அவரது அமைச்சர்களோ எங்களை "தேச விரோதிகள்" அல்லது "தேசபக்தி இல்லாதவர்கள்" என்று அழைக்கவில்லை.
நமது அரசியலமைப்பின் சிற்பியான பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவைக் கெடுக்கும் வன்முறையாளர்களுக்கு அவர் ஒருபோதும் உதவவில்லை. 1975ஆம் ஆண்டு, நமது ஜனநாயகத்தின் மீது ஒரு களங்கம் ஏற்பட்டது. ஆனால், 2024இல் எதிர்க்கட்சிகளை மதிக்காதவர்கள் யார் என்பதை மறந்து விடக்கூடாது" என்றார்.