கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரும் நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தனக்கு கடிதம் எழுதியிருந்தார் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தெரிவித்துள்ளார். 


கிருஷ்ணகிரி என்.சி.சி முகாம் சம்பவம்: செய்தியாளர்களிடம் இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "வருத்தம் தெரிவித்து சிவராமன் எனக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகக் கூறியிருந்தார். சிவராமனைக் காவல்துறையில் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் கட்சியினர்தான். குற்ற உணர்வால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதில் சந்தேகமில்லை" என்றார்.


சிவராமன் மரணத்தில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாலருமான எடப்பாடி பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் சந்தேகம் எழுப்பி வந்தார். இந்த நிலையில், சீமான தெரிவித்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


கிருஷ்ணகிரி பர்கூரில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற என்.சி.சி. முகாமில் 12 வயதான சிறுமிக்கு என்.சி.சி. பயிற்சியாளர் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு அடுத்தடுத்து அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியானது.


சீமான் பகிர்ந்த பகீர் தகவல்: மாணவிகளுக்கு பயிற்சி அளித்த சிவராமன், போலி என்.சி.சி. பயிற்சியாளர் என்பது தெரிய வந்தது. மேலும், அவர் அந்த மாணவியை போல மேலும் 12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததும் தெரியவந்தது. இந்த விவகாரம் தெரிந்தும் பள்ளியின் முதல்வர் உள்பட பலரும் இந்த சம்பவத்தை காவல்துறைக்கு தெரியப்படுத்தாமல் மறைத்துள்ளனர்.


இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர், சிவராமனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சிவராமனை கட்சியில் இருந்து நீக்குவதாக நாம் தமிழர் கட்சி அறிவித்தது.


போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடியபோது சிவராமன் காலில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேல் சிகிச்சைக்காக அவர் சேலம் அரசு மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை உயிரிழந்தார்.