அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் சேர்ந்துள்ள கோவை செல்வராஜ் நான்கரை ஆண்டு காலமாக அதிமுகவுக்கு வக்காலத்து  பேசியதற்கு நான் மக்களிடம் பாவமன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 


தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த கோவை செல்வராஜ் கடந்த 1991 – 96ல் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலக்கட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏவாக பதவி வகித்தவர். அப்போது காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து மோதலால் ஜெயலலிதா ஆதரவாளராக மாறி, காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏவாக சட்டமன்றத்தில் செயல்பட்டார்.  ஜெயலலிதாவிற்கு ஆதரவாக அவர் செயல்பட்டதால் ‘ஜெயா காங்கிரஸ் எம்.எல்.ஏ’ என்று அப்போது அவர் வர்ணிக்கப்பட்டார். 


இதனைத் தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு காங்கிரஸ் சேவாதள அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த அவர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தார். இதனால் அந்த சமயத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை கடுமையாக விமர்சித்து வந்தார். அவர் தலைமையில் இருப்பது ‘கருணாநிதி காங்கிரஸ்’ என கோவை செல்வராஜ் சொல்ல, ஆதாரத்துடன் டெல்லிக்கு தகவல் பறந்தது. 






அப்போது தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இருந்தது. கூட்டணி கட்சியையே விமர்சித்ததால் 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காங்கிரஸில் இருந்து கோவை செல்வராஜ் நீக்கப்பட்டார். முன்னதாக 2015ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டப்போது அவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அவர் கருத்து தெரிவித்து அதிர வைத்தார். 


காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் அதிமுகவுக்கு சென்ற கோவை செல்வராஜூக்கு கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலிலும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு கேட்டும் அதனை எடப்பாடி பழனிசாமி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் இருந்த கோவை செல்வராஜ் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக மாறினார். சமீபத்தில் அதிமுக ஓபிஎஸ்- இபிஎஸ் அணிகளாக பிரிந்தது. 


அப்போது ஓபிஎஸ் அணியில் இடம் பெற்று எடப்பாடி பழனிசாமியை சரமாரியாக தாக்கி பேசினார். அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்தவர்களையும் கடுமையாக விமர்சித்தார். இந்நிலையில் தான் சில தினங்களுக்கு முன் ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் சுயநலத்துக்காக பதவியை அனுபவித்தனர் என்றும், இவர்களால் ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்து உயிரோடு அழைத்து வர முடியவில்லை எனவும் தெரிவித்து அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். 


அதேசமயம் அவர் திமுகவுக்கு செல்ல அமைச்சர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் தான் இன்றைய தினம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி துணையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாலரை ஆண்டு காலமாக அதிமுகவுக்கு வக்காலத்து  பேசியதற்கு நான் மக்களிடம் பாவமன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தற்போது தமிழகத்தில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உடன் பயணிப்பேன். விரைவில் ஐந்தாயிரம் பேரை திமுகவில் இணைத்து கோவையை திமுக கோட்டையாக மாற்றுவோம். தமிழ்நாட்டு மக்கள் நலன் கருதி தெளிவான முடிவெடுத்து திமுகவில் இணைந்துள்ளேன். 14 வயதில் நான்  திமுகவிற்கு ஓட்டு கேட்டு இருக்கேன்  தற்போது திமுகவில் தாய் கழகத்திற்கு இணைந்து உள்ளேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக என தெரிவித்துள்ளார்.