Karur Stampede TVK Vijay: தவெக தலைவர் விஜயின் பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 39 பேர் உயிரிழந்ததற்கு பல்வேறு காரணங்கள் அடுக்கப்படுகின்றன.

Continues below advertisement

கரூரில் மரண ஓலம்..

கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரை, பெரும் சோகத்துடன் முடிவடைந்துள்ளது. அந்த கூட்ட நெரிசலில் சிக்கி 5 சிறுவர்கள், 5 சிறுமிகள், 17 பெண்கள் மற்றும் 12 ஆண்கள் என மொத்தம் 39 பேர் உயிரிழந்துள்ளனர். 51 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், 21 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கரூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள உயிரிழந்தோரின் உடலை கண்டு, குடும்பத்தினர் கதறி அழும் காட்சிகள் காண்போரை மனமுடைய செய்துள்ளது. தாய் மற்றும் அவரது மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியானது, ஒன்றரை வயது மகனை இழந்த வாய் பேச முடியாத, காது கேளாத தாய் இடிந்து போன் நிற்கும் காட்சிகள் போன்றவை மனதை உலுக்கி வருகின்றன.

துயரத்திற்கு என்ன காரணம்?

உரிய நேரத்தில் பரப்புரை மேற்கொள்ள குறிப்பிட்ட இடத்திற்கு விஜய் வராதது? எதிர்பார்த்ததை காட்டிலும் அதிகப்படியான மக்கள் கூடியது? தவெக தரப்பில் கோரப்பட்ட இடத்தை பரப்புரைக்காக காவல்துறை ஒதுக்காதது? காவல்துறை விதித்த கட்டுப்பாடுகளை தவெகவினர் மீறியது? விஜயின் பரப்புரை வாகனத்தின் அருகே பள்ளம் இருந்ததாக கூறப்படுவது? கடும் கூட்டம் கூடும் என தெரிந்திருந்தும் குழந்தைகளை எல்லாம் பரப்புரை கூட்டத்திகு பெற்றோரே அழைத்துச் சென்றது? என பல்வேறு காரணங்களும் இந்த ஒட்டுமொத்த துயரத்திற்கு காரணங்களாக கூறப்படுகிறது.

Continues below advertisement

மின்சாரம் துண்டிப்பு முக்கிய காரணமா?

இதனிடையே, கரூர் அரசு மருத்துவமனையில் பெண் ஒருவர் அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகியுள்ளது. அந்த பெண் பேசுகையில், “விஜய் உரையாற்றியபோது அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அவர் என்ன பேசுகிறார் என மக்களுக்கு கேட்கவில்லை. அவரது பேச்சை கேட்க மக்கள் முண்டியத்துக் கொண்டு முன்னோக்கி பாய்ந்தனர். ஆர்வமிகுதியில் மக்கள் முன்னோக்கி சென்றதே கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக” தெரிவித்துள்ளார்.

நீண்ட நேரம் காத்திருப்பு

விஜயின் வருகைக்கு பல மணி நேரத்திற்கு முன்பாகவே தவெக தொண்டர்கள் கரூரில் குவிய தொடங்கினர். ஆட்டம் பாட்டம் என அந்த இடமே களைகட்டியிருந்தது. நீண்ட நேர காத்திருப்பால், விஜய் வருவதற்கு முன்பாகவே அந்த கூட்டம் களைப்படைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான், விஜய் உரையாற்றும்போது ஏற்பட்ட மின்வெட்டை தொடர்ந்து, அவரது பேச்சை கேட்க பரப்புரை வாகனத்திற்கு அருகில் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட நெரிசலில் தான் பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும், நீண்ட நேரம் தண்ணீர் கூட அருந்தாமல் பலர் கூட்டத்திற்குள் சிக்கிக் கொண்டதால் மயங்கி விழுந்து நெரிசலில் சிக்கிக் கொண்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.