கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் மேற்காெண்ட பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த குடும்பத்தினர், காயம்பட்டவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து கட்சி அரசியல் தலைவர்களும் நேரில் சென்று சந்தித்தனர்.
கரூர் செல்ல விஜய் ஆயத்தம்:
ஆனால், யாரைப் பார்ப்பதற்காக வந்து உயிரிழந்தார்களோ அந்த விஜய்யோ அவரது சார்பில் தவெக நிர்வாகிகளோ சம்பவம் நடந்து 10 நாட்களாகியும் யாரும் நேரில் செல்லாதது மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. இந்த சம்பவத்தால் விஜய்க்கு மிகப்பெரிய அளவில் நெருக்கடி உருவாகியுள்ளது.
விஜய் கரூர் மக்களைச் சந்திக்காமல் மீண்டும் பரப்புரையில் ஈடுபட்டால் அவருக்கு மிகப்பெரிய அவப்பெயர் உண்டாகும் என்பதால் கடந்த சில நாட்களாகவே விஜய் கரூர் மக்களைச் சந்திப்பதற்கான வேலைகள் சத்தமே இல்லாமல் நடந்து வந்தது. இந்த நிலையில், விஜய் கரூரில் மக்களைச் சந்திப்பதற்காக தமிழக டிஜிபி-யிடம் மனு தாக்கல் செய்துள்ளார்.
விஜய் தரப்பு கோரிக்கைகள்:
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் குறித்து கீழே காணலாம்.
1. தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விஜய்க்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து தனது வாகனத்திற்குச் செல்ல தனி வழி.
2. திருச்சி விமான நிலையத்தில் விஜய் வருவதை முன்னிட்டு தொண்டர்கள், ரசிகர்கள் வருவதற்கு அறவே தடை விதிக்க வேண்டும்.
3. திருச்சியில் கரூர் வரை விஜய் செல்லும் பாதை Green Corridor ஏற்பாடு செய்ய வேண்டும். அதாவது, விஜய் செல்லும் வாகனம் எந்த இடத்திலும் சாலையில் சிக்னலில் நிற்காதவாறு நேரடியாக செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
4.விஜய்யின் வாகனத்தை பின்தொடர்ந்து ரசிகர்களோ, தொண்டர்களோ வருவதற்கு தடை விதிக்க வேண்டும்.
5. கரூரில் விஜய் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக கூடும் இடத்தில் ஒரு கி.மீட்டர் தொலைவிற்கு ரசிகர்கள், தொண்டர்கள் நுழைய அனுமதிக்கக்கூடாது.
6. கரூரில் விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக நடத்தும் நிகழ்வில் எந்த ஊடகத்திற்கும் அனுமதி வழங்கக்கூடாது.
விஜய் தரப்பில் விஜய்யின் பாதுகாப்பிற்காகவும், விஜய் வருவதால் மீண்டும் கூட்டம் வரக்கூடாது என்றும் அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரதமருக்கு கூட இவ்வளவு பில்டப் இல்ல?
ஏனென்றால், நாட்டின் பிரதமர் போன்றோருக்குத்தான் இந்தளவு உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்படும். அவர்களுக்கே அவர்கள் பங்கேற்கும் நிகழ்வில் ஒரு கி.மீட்டர் தொலைவிற்கு யாரும் நுழைய தடை விதிக்கப்படாது. ஆனால், விஜய் தரப்பினர் முன்வைத்த இந்த கோரிக்கைகள் அனைத்தும் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்கச் செல்வதே மிகவும் தாமதம் என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில், அவர் இந்தளவு கட்டுப்பாடுகளை விதிக்க காவல்துறைக்கு மனு தாக்கல் செய்திருப்பது விஜய் மற்றும் தவெக மீது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தும் என்றே அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.