கரூரில் நடந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாடும் சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக 11 வழக்குகள் இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. இதில் எம்.எல்.ரவி என்பவர் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

Continues below advertisement

சிபிஐ விசாரணை மனு தள்ளுபடி:

இதை விசாரித்த நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு தொடக்க நிலை விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது இதை எப்படி சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியும் என்று கேள்வி எழுப்பியதுடன், அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், சிபிஐ விசாரணை கோருவதற்கு பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு இல்லாதவருக்கு என்ன தகுதியுள்ளது? என்று மனுதாரருக்கு கண்டனத்தையும் பதிவு செய்தார். 

Continues below advertisement

விசாரணையில் திருப்தியில்லை என்றால்தான் விசாரணையை மாற்ற உத்தரவிட கோர முடியும் என்றும், இது சிபிஐ விசாரணைக்கு உகந்தது அல்ல என்றும் தெரிவித்தனர். மேலும், நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள் என்று கூறி சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.இதுதவிர, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் கூடுதல் இழப்பீடு தரக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு, விசாரணை நடைபெற்று வருவதால் தற்போது கூடுதல் இழப்பீடு வழங்க உத்தரவிட இயலாது என்றும் நீதிமன்றத்தில் தீர்ப்பு அளித்துள்ளனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த துயர சம்பவத்தில் அரசு மற்றும் விஜய் தரப்பினர் 2 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். கரூரில் நடந்த பரப்புரை காரணமாகவே 41 பேர் உயிரிழந்ததால் இனி விதிகளை வகுக்கும் வரை கூட்டம் நடத்த அனுமதியில்லை என்று அரசுத்தரப்பில் என்று வாதிட்ட நிலையில், ஏற்கனவே அனுமதி பெற்ற கட்சிகள் கூட்டம் நடத்த தடையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்ஜாமினுக்கு மறுப்பு:

இந்த சம்பவத்தில் அரசையும் விமர்சித்துள்ள நீதிமன்றம் பாெதுக்கூட்டங்கள் நடக்கும்போது அதில் பங்கேற்பவர்ள் வெளியில் செல்வதற்கும் வழிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. 

விஜய் கரூருக்கு செல்வதற்கு முன்பு நாமக்கல்லில் தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் தவெக மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் முன்ஜாமின் கோரிய மனுவில் அவருக்கு முன்ஜாமின் தர நீதிமன்றம் மறுத்துவிட்டது. கட்சியினர் அடாவடி செயல்களில் ஈடுபடு்ம்போது தனக்குத் தெரியாது என்று எப்படி கூறலாம்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். நாமக்கல் மாவட்ட தவெக செயலாளர் சதீஷ்குமார் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விரைவில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் கைது:

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை இரவு விஜய் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே கூட்ட நெரிசலால் மயக்கம், தலைசுற்றலால் ஏராளமானோர் ஆங்காங்கே மயங்கி விழுந்தனர். பின்னர், அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்ததாக அரசு தெரிவித்தது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே 31 பேர் உயிரிழந்த நிலையில் 10 பேர் சிகிச்சையின்போது உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் விஜய்க்கும், தவெக-விற்கும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்தகட்ட நகர்வை எப்படி மேற்கொள்வது என்பதில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விஜய் வேதனை தெரிவித்து வீடியோ வெளியிட்ட நிலையில், புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமாரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.