தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. சினிமாவில் நம்பர் 1 நடிகராக உலா வரும் விஜய் அரசியலிலும் நம்பர் 1 ஆக திகழும் கனவுடன் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார். மெதுவாக தனது அரசியல் பயணத்தை தொடங்கி தேர்தலுக்காக தீவிரமாக அவர் களப்பணியாற்றி வந்தார்.
பரப்புரைக்கு புதிய வாகனம்:
ஆனால், கடந்த சனிக்கிழமை கரூரில் விஜய்யின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியுள்ளது. பரப்புரை நடந்த வேலுசாமிபுரம் பரப்புரைக்கு ஏற்ற இடம் இல்லை என்றும், விஜய்யின் தாமதமும் ஒரு காரணம் என்றும் என பல காரணங்களை பலரும் முன்வைத்து வருகின்றனர். இந்த சூழலில், இந்த சம்பவத்திற்கு விஜய் பயன்படுத்திய பரப்புரை வாகனமும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் ஒரு அரசியல் கட்சி தலைவராக விஜய்யை மிகவும் கடுமையாக பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. கூட்ட நெரிசலுக்கு தன்னுடைய வாகனமும் ஒரு காரணம் என்று விஜய் கருதுவதால், தன்னுடைய பரப்புரை வாகனத்தை மாற்ற விஜய் முடிவு செய்துள்ளார். அதாவது, தற்போது பேருந்தில் பரப்புரையை செய்து வரும் விஜய் இனி வேனில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
தவெக அலுவலகத்தில் பூஜை:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகமான பனையூர் அலுவலகத்தில் விஜய் பயன்படுத்தி வந்த பரப்புரை பேருந்துடன், இந்த வேனிற்கும் பூஜை செய்துள்ளனர். விஜய் இனி தன்னுடைய சுற்றுப்பயணங்களில் இந்த வேனையே பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த வேன் குறுகலான சந்துகளிலும் எளிதாக செல்லும் வகையில், விஜய்க்கு தேவையான வசதிகளை கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. விஜய் ஏற்கனவே பயன்படுத்திய பேருந்தில் கழிப்பறை, சோபா, ஓய்வு எடுக்கும் அறை, உணவு அருந்தும் வசதிகள் இடம்பெற்றிருந்தது. தற்போது, இதே வசதிகளுடன் இந்த புதிய மினி வேன் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பரப்புரையில் பயன்பாடா?
ஏனென்றால், கரூரில் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பயன்படுத்தி பரப்புரை பேருந்து வந்து செல்லவும், மீண்டும் செல்லவும் மிகவும் சிரமமாக இருந்தது. இதுவும் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாகவே கருதப்படுகிறது. விஜய்யின் அடுத்தகட்ட பரப்புரையில் இந்த புதிய வாகனத்தை எதிர்பார்க்கலாம் என்று கருதப்படுகிறது.
கரூர் துயர சம்பவத்தால் விஜய் தன்னுடைய அரசியல் பரப்புரையை அடுத்த இரண்டு வாரங்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளார். தவெக மீது மிகப்பெரிய விமர்சனமும், அதிருப்தியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் விஜய் இந்த விமர்சனத்தையும், அதிருப்தியையும் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.