பா.ஜ.க.வைச் சேர்ந்த கே.டி.ராகவன் பெண் ஒருவரிடம் வீடியோ காலில் ஆபாசமாக நடந்துகொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தொடர்பாக இன்று சீமான் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கே.டி.ராகவனின் செயலுக்கு ஆதரவு தெரிவிப்பது போன்று சீமான் கருத்து கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீமானின் இந்த பேட்டிக்கு காங்கிரஸ் நிர்வாகியும், கரூர் எம்.பி.யுமான ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக, அறிக்கை வெளியிட்ட ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாகவும் வெளியிட்டிருந்தார். கரூர் எம்.பி. ஜோதிமணி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது, அரசியல் கட்சியின் தலைவராக உள்ள சீமான் பொறுப்பற்ற முறையில், கூச்சமே இல்லாமல் தமிழ்நாடே பார்த்து அதிர்ச்சியடைந்த பா.ஜ.க. ராகவனின் வீடியோவை, பாலியல் அத்துமீறலை, சுரண்டலை ஆதரிப்பது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. வேறு யாரும் செய்யாததையா ராகவன் செய்துவிட்டார் என்று கூச்சமே இல்லாமல் ராகவன் கேட்கிறார். காலம், காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்காக அது எல்லாம் சரி ஆகிவிடுமா? இல்லை. அந்த குற்றத்தில் ஈடுபட்ட கொடும் குற்றவாளிகள் எல்லாம் நிரபராதிகள் ஆகிவிடுவார்களா?
எப்படி காலம், காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறதோ, அதற்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை சீமான் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த போராட்டங்களின் விளைவாகத்தான் பெண்கள் அரசியல் உள்பட பல துறைகளிலும் தங்களோட வெற்றிகரமான பங்களிப்பை செலுத்துகின்றனர்.
பல்வேறு உளவியல் பொருளாதார தடைகளைத் தாண்டிதான் பெண்கள் மேலே வர வேண்டியுள்ளது. அப்படி பல போராட்டங்களுக்கு பிறகு பொதுவாழ்க்கையில் வரும் பெண்கள் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்தப்பட வேண்டும். அப்படி இல்லாமல் யாரேனும் அத்துமீறி பெண்களிடம் நடந்து கொண்டால் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டும். அதுதான் ஒரு நாகரீக சமூகத்தின் கடமை.
பெண்களிடம் அயோக்கியமாக நடந்துகொள்ளும் அயோக்கியர்களையும், அதை அப்பட்டமாக ஆதரிப்பவர்களையும் ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். இதுதான் சீமான் போன்றோரை உறுத்துகிறது. இதைத்தான் கேடுகெட்ட சமூகம் என்று சொல்கிறார்கள். சீமான் போன்றோர் ஏன் ராகவன் போன்றோரை ஆதரிக்கிறார்கள் என்று யோசிக்க வேண்டும்.
சீமான் மீதும் கடந்த காலத்தில் பாலியல் குற்றச்சாட்டு இருந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்மேலான குற்றச்சாட்டை மறைப்பதற்கு தான் சீமான் ராகவனை ஆதரிக்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. மேலும், சீமான் பா.ஜ.க.வின் பீ டீம் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
எப்படி இருந்தாலும் சீமானின் செயல் வெட்கக்கேடானது. சீமான் மற்றும் கே.டி.ராகவனின் வளர்ச்சி தமிழ்நாட்டிற்கு குறிப்பாக தமிழக பெண்களுக்கு ஆபத்தானது. தமிழ்நாட்டின் எதிர்காலமாக உள்ள இளைஞர்கள், மாணவர்கள் சீமான் போன்றோரின் பொய் முகத்தை புரிந்துகொண்டு அவர்களை புறக்கணிக்க வேண்டும். அதுதான் தமிழ் சமூகத்திற்கு செய்யும் பெரிய தொண்டு” இவ்வாறு அவர் பேசியுள்ளார்.