காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்கு உட்பட்ட கே எம் வி. நகர், யாகசாலை மண்டப தெரு உள்ளிட்ட பகுதிகளில் நியாய விலை கடை கட்டிடம் வேண்டி அப்பகுதி மக்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசனிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.27லட்சம் ஒதுக்கீடு செய்து புதியதாக நியாய விலை கடை கட்டிமுடிக்கப்பட்டது இதன் திறப்பு விழா நேற்று  நடைபெற்றது.



நியாய விலை கடைகள் திறப்பு விழாவிற்கு வருகை தந்த காஞ்சிபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன், நியாய விலைக்கடையில் பொருட்களை வாங்க வந்திருந்த பொதுமக்களை வைத்து , நியாய விலைக்கடைகளை திறந்து வைத்தார். நியாயவிலை கடையை சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைப்பார் என எதிர்பார்த்த நிலையில், பொது மக்களை வைத்து நியாயவிலைக் கடைகளை திறந்து வைத்த செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.



மேலும், புண்ணியகோட்டீஸ்வரர் கோவில் தெருவில் குடிநீர் பற்றாக்குறையை போக்க  ரூபாய் 7.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக்கிணறு, உடன் கூடிய சிறு குடிநீர் தொட்டியை மக்கள் பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி எழிலரசன் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து  கடந்த ஆட்சிக்காலத்தில் வேலாத்தம்மன் கோவில் தெரு பகுதியில் கட்டப்பட்டு பயன்பாட்டுக்குவராமல் இருந்த,  நியாயவிலைக் கடை கட்டிடத்தில் புதிய பகுதிநேர நியாய விலை கடையாக செயல்பாட்டுக்கு , கொண்டு வந்து அந்த நியாய விலை கடை  எழிலரசன் திறந்து வைத்தார். அங்கு கூடியிருந்த பொதுமக்களிடம் கொரோனா நோய்த்தொற்றை தடுக்க தடுப்பூசி போடுவதன் அவசியத்தை எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.



இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் லட்சுமி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் சன் பிராண்ட் கே. ஆறுமுகம் மற்றும் திமுக நிர்வாகிகளும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.