காங்கிரஸ், ஜனதா கட்சி, திமுக, அதிமுக... இப்படி அனைத்து கட்சிகளிலும் பணியாற்றியவர் பழ.கருப்பையா. தற்போது கமலின் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். பணியாற்றுகிறாரா என்பது தெரியவில்லை, ஆனால் இணைந்திருக்கிறார். இந்த இடைவெளி தான் பழ.கருப்பையா குறித்த ஒரு பிரேக்கிங் செய்திக்கு வழிவகுத்துள்ளது. ‛மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகுகிறார் பழ.கருப்பையா...’ என்பது தான் அந்த செய்தி. மக்கள் நீதி மய்யத்தில் பல முக்கிய நிர்வாகிகள் விலகியதும், பழ.கருப்பையா திடீரென முடிவெடுத்து விலகுபவர் என்பதாலும் இந்த செய்தியை எளிதில் யாராலும் கடக்க முடியாது. ஏன் இந்த முடிவு...? என்ன நடந்தது மக்கள் நீதி மய்யத்தில்...? அடுத்து பழ.கருப்பையா எங்கு செல்கிறார்...? என்கிற பல்வேறு கேள்விகளுடன் அவரை தொடர்பு கொண்டோம். ABP நாடு செய்தி குழுமத்திற்கு அவர் அளித்த பிரேத்யேக பேட்டி இதோ...




கேள்வி:  மக்கள் நீதி மய்யத்திலிருந்து நீங்கள் விலகிவிட்டீர்களா...?


பழ.கருப்பையா:: மக்கள் நீதி மய்யத்தில் தான் இருக்கிறேன். விலகவில்லை. டெல்லி வரை இதை பரப்பிவிட்டார்களா...? அது தவறான தகவல். வதந்தி தான்.


கேள்வி: ஏன் இந்த வதந்தி பரவியது?


பழ.கருப்பையா: ஒரு செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்தேன். கட்சியில் ஆலோசகராக என்ன ஆலோசனை வழங்கினீர்கள் என்று கேட்டார்கள். நானும் நக்கலாக, ‛ஆலோசனை கமலும் எதுவும் கேட்கவில்லை, நானும் எதுவும் சொல்லவில்லை.. கவுரவத்திற்காக தான் எனக்கு அந்த பதவி தந்திருக்கிறார்கள்...’ என்று தான் கூறினேன். அதை இப்படி போட்டுவிட்டார்கள்.


கேள்வி: உண்மையில் அப்படி விலகும் எண்ணம் இருக்கிறதா?


பழ.கருப்பையா: கட்சியை விட்டு விலக ஏதாவது காரணம் வேண்டுமே? இப்போதைக்கு எந்த காரணமும் இல்லை. இரண்டு திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக தானே இங்கு வந்துள்ளேன். பிறகு எதற்கு நான் விலக வேண்டும். ஒரு பேட்டியை வைத்து ஆளாளுக்கு கதை எழுதுகிறார்கள். 


கேள்வி: விஜய் மக்கள் இயக்கத்திற்கு செல்லவிருப்பதாக ஒரு தகவல் உள்ளதே..?


பழ.கருப்பையா: விஜய் கட்சியா வைத்திருக்கிறார்... அவர் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லையே...? போய் நின்று கொள்ளுங்கள் என அவர் ரசிகர்களிடம் கூறியுள்ளார். மற்றபடி அவர் அரசியலுக்கு வரவில்லை. நான் ஏன் அங்கு போகப்போகிறேன்.


கேள்வி: எதுவுமே இல்லாமல் எப்படி புகைந்தது?


பழ.கருப்பையா: தெரியல தம்பி... நக்கலாய் நான் சொன்ன பதிலை வைத்துக் கொண்டு, கிளப்பிவிட்டுள்ளனர். விஜய் கட்சியில் நான் சேர்வேனா என்றால்... அந்த மாதிரியான ஊகத்திற்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. நான் கொடுத்த அந்த பேட்டி இன்று இரவு வருவதாக கூறியிருக்கிறார்கள். அதை பார்த்தால் தெரியும். 


கேள்வி: யார் இதை பரப்பியதாக நினைக்கிறீர்கள்...?


பழ.கருப்பையா: நான் கேலியாக பேசியது இந்த அளவிற்கு சென்றுவிட்டது. அதை நம்பி இரண்டு சேனல்கள் வேறு என்னிடம் பேட்டி வாங்க வீட்டு வாசலில் நிற்கின்றனர். ஒரு சேனல் வந்து கொண்டிருப்பதாக கூறுகின்றனர். யார் பரப்பியது என்று தெரியவில்லை.


கேள்வி: உண்மையில் உங்களுக்கு விலகும் எண்ணம் இல்லையா?


பழ.கருப்பையா: கட்சி தோற்றதினால் விலகுபவன் நான் அல்ல. கருத்து மாற்றத்தினாலும் விலகவில்லை. எதையும் வேகமாய் செய்யுங்கள் என்று கூறுகிறேன். வேகப்படுத்த கூறுகிறேன். அவ்வளவு தான். 


கேள்வி: நீங்கள் சொல்லும் வேகம்... கட்சியில் இல்லையா?


பழ.கருப்பையா: வேகமாய் இருங்கன்னு தான் சொல்லிட்டு இருக்கேன்!


கேள்வி: உள்ளாட்சி தேர்தலில் மநீம பெரிய ஆர்வம் காட்டவில்லையே?


பழ.கருப்பையா: ஏதோ பண்றாங்க.. என்ன பண்றாங்கனு பார்ப்போம். அதற்கெல்லாம் அங்கு நிறைய பேர் இருக்காங்க தம்பி, என்றார்.


இதற்கிடையில் பழ.கருப்பையா மக்கள்நீதி மய்யத்திலிருந்து விலகுகிறார் என்று பலரும் தங்கள் கருத்துக்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.