கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர் எஸ்.எம். கிருஷ்ணா. வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இவர் கடந்த பல ஆண்டுகளாகவே அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்த சூழலில், 92 வயதான கிருஷ்ணா காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


எஸ்.எம்.கிருஷ்ணா மறைவு:


வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று அதிகாலை சுமார் 2.45 மணியளவில் அவரது வீட்டில் காலமானார். இவர் கர்நாடக மாநிலத்திற்கு கடந்த 1999ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை முதலமைச்சராக பொறுப்பு வகித்து இருந்தார். மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். கர்நாடக தலைநகர் பெங்களூரை சிலிகான் வேலி என்று மாற்றி கட்டமைத்ததில் எஸ்.எம்.கிருஷ்ணாவின் பங்கு அளப்பரியது.


இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு 1932ம் ஆண்டு மே 1ம் தேதி மைசூருக்கு உட்பட்ட சோமனஹள்ளியில் பிறந்தார். எஸ்.எம்.கிருஷ்ணா மைசூரில் உள்ள ராமகிருஷ்ணா வித்யாலயாவில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், மைசூர் மகாராஜா கல்லூரியில் இளங்கலைப் படிப்பை முடித்தார். இதையடுத்து, பெங்களூரில் உள்ள சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தார். பின்னர், அமெரிக்காவின் டாலஸ் நகரில் உள்ள சதர்ன் மெதோடிஸ்ட் பல்கலைக்கழகத்திலும், அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் சட்டப் பல்கலைக்கழகத்திலும் மேற்படிப்பை முடித்தார்.

சுயேட்சை எம்.எல்.ஏ.வாக தொடங்கிய அரசியல் பயணம்:


சட்ட மேற்படிப்பை முடித்த எஸ்.எம்.கிருஷ்ணாவிற்கு அரசியலில் ஆர்வம் இருந்தது. இதையடுத்து, அவர் 1962ம் ஆண்டு சுயேட்சையாக மட்டூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், அவர் பிரஜா சோசியலிஸ்ட் கட்சியில் இணைந்தார். ஆனால், 1967ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். பின்னர், மாண்டியா மக்களவைத் தொகுதியில் 1968ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.


எஸ்.எம்.கிருஷ்ணாவின் பங்களிப்பால் பிரஜா சோசியலிஸ்ட் கட்சி காங்கிரசுடன் இணைந்தது. மாண்டியா தொகுதியில் 3 முறை மக்களவை உறுப்பினராக எஸ்.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் முறை பிரஜா சோசியலிஸ்ட் கட்சியில் இருந்து தேர்வான அவர், அடுத்த 2 முறை காங்கிரஸ் உறுப்பினராக வெற்றி பெற்றார்.

இந்திரா காந்தி ஆட்சியில் அமைச்சர்:


பின்னர், எஸ்.எம்.கிருஷ்ணா தனது எம்.பி. பதவியை 1972ம் ஆண்டு ராஜினாமா செய்துவிட்டு, கர்நாடக எம்.எல்.சி.யாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் அந்த மாநில அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1980ம் ஆண்டு மீண்டும் மக்களவைக்குத் தேர்வான அவர் இந்திரா காந்தி அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.


1985ம் ஆண்டு கர்நாடக எம்.எல்.ஏ.வாக அவர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, 1989ம் ஆண்டு முதல் 1993ம் ஆண்டு வரையில் கர்நாடகாவின் சபாநாயகராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.  இதையடுத்து, அவர் 1993 மற்றும் 1994ம் ஆண்டு வரை கர்நாடக துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.


கர்நாடகாவின் ராஜ்ய சபா எம்.பி.யாக 1996ம் ஆண்டு முதல் 1999ம் ஆண்டு வரையிலும் பதவி வகித்த எம்.எம்.கிருஷ்ணா, 1999ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகாவின் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

கடைசி காலத்தில் பா.ஜ.க.:


2004ம் ஆண்டு மகாராஷ்ட்ரா ஆளுநராக எஸ்.எம்.கிருஷ்ணா நியமிக்கப்பட்டார். 2008ம் ஆண்டு ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த அவர், மீண்டும் அரசியலுக்கு திரும்பினார். மன்மோகன்சிங் தலைமையிலான அரசில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக 2009ம் ஆண்டு தேர்வானார். பின்னர் மீண்டும் கர்நாடக அரசியலுக்கு திரும்பிய அவர் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்தார். இதையடுத்து, அவர் கடந்த 2017ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். காங்கிரஸ் கட்சிக்காக 50 ஆண்டுகளுக்கு மேல் உழைத்த எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸில் இருந்து ஒதுங்கி பா.ஜ.க.வில் இணைந்தது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. பின்னர், கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.


இவரது மனைவி பிரேமா. இவரது மகள் மாளவிகா கிருஷ்ணா. கேபே காஃபி நிறுவனத்தின் உரிமையாளர் இவர். இவரது கணவர் சித்தார்த்தா கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.