’’ஏன் இருமொழிக்கொள்கையில் இவ்வளவு பிடிவாதம்’’ என கேள்வி எழுப்பிய கரண் தாப்பரை, ’’உத்தரப் பிரதேசம் மற்றும் பிஹாரில் எத்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும்? முதலில் உத்தரப் பிரதேசத்தில் எத்தனை குழந்தைகளுக்கு இரண்டு மொழிகள் நன்றாக தெரியும்? எங்களை விடச் சிறந்தவர்களை காட்ட முடியுமா? என சரமாரியாக பதிலளித்து தெறிக்கவிட்டுள்ளார் அமைச்சர் பிடிஆர்.
கரண் தாப்பர் தொகுத்து வழங்கும் தனியார் ஊடக பேட்டி ஒன்றில், தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். அப்போது அவரிடம் தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை என பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தக்க பதிலடி கொடுத்து மாஸ் காட்டினார் பிடிஆர்.
’’ஏன் இருமொழிக்கொள்கையில் உங்கள் தமிழ்நாடு இவ்வளவு பிடிவாதமாக உள்ளது..? மும்மொழிக் கொள்கையை ஏன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறீர்கள்.. குழந்தைகள் மொழிகளை எளிதிலும் விரைவாகவும் கற்றுக்கொள்ளக் கூடிய திறன் படைத்தவர்கள். இது அவர்களுக்கு மேலும் நன்மை பயக்கும்தானே’’ என அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் கேள்வி எழுப்பினார் கரண் தாப்பர்.
அதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ’’ஓ..அப்படியா.. உத்தரப் பிரதேசத்தில் எத்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும்? பிஹாரில் எத்தனை குழந்தைகளுக்கு மூன்று மொழிகள் தெரியும்? முதலில் உத்தரப் பிரதேசத்தில் எத்தனை குழந்தைகளுக்கு இரண்டு மொழிகள் நன்றாக தெரியும்?
சரி நீங்கள் சொல்வதுபோல குழந்தைகள் மூன்று மொழிகள் கற்றுக்கொள்வது எளிது என்றால் அதன்மூலம் நமது நாடு கடந்த 75 ஆண்டுகளில் என்ன முன்னேற்றம் கண்டது? குழந்தைகள் எளிதில் கற்றுக்கொள்வார்கள் என்பதற்கு என்ன சான்று உள்ளது? முதலில் அனைத்துக் குழந்தைகளும் இரு மொழிகளை தங்கு தடையின்றி கற்றிருக்கிறார்களா? அதன்பிறகு மூன்று மொழிகள் கற்றுக்கொள்வதைப் பற்றிப் பேசலாம்.
நாங்கள் எங்கள் தமிழ்நாட்டிற்கு இருமொழிக் கொள்கைதான் வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். இனம், கலாச்சாரம் மற்றும் பொருளாதார ரீதியாக எடுத்த இந்த முடிவு எங்களுக்கு காலம்காலமாக நல்ல பலன்களை அளித்துள்ளது. இந்த நாட்டில் மும்மொழிக் கொள்கையை பின்பற்றும் எந்த மாநிலம் தமிழ்நாட்டைக் காட்டிலும் சிறந்து விளங்குகிறது என்பதை உங்களால் சொல்ல முடியுமா? நாங்கள் ஏன் மற்றவர்களுக்காக எங்கள் கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும்?’’ எனப் பேசி கரண் தாப்பரை வாயடைத்துப்போக வைத்துள்ளார் அமைச்சர் பிடிஆர்.