BJP New President: பாஜகவின் புதிய தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டால், மாநில தலைவர் அண்ணாமலைக்கு அது பெரும் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது.
பாஜகவின் அடுத்த தலைவர் யார்?
பாஜகவின் தேசிய தலைவராக உள்ள நட்டாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்டது. அவருக்கான மாற்றை தேடும் பணியில் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. மார்ச் மாதத்திலேயே, பாரதிய ஜனதா கட்சியின் அடுத்த தேசியத் தலைவர் யார் என்பது தெரியவரும் என கூறப்படுகிறது. இது குறித்து முடிவெடுக்கும் உரிமையை பிரதமர் நரேந்திர மோடியிடம் ஆர்.எஸ்.எஸ் ஒப்படைத்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் பொருள் ஜே.பி. நட்டாவின் வாரிசை பிரதமர் மோடி தீர்மானிக்க உள்ளார். பல்வேறு அரசியல் கணக்குகளின் அடிப்படையில், பாஜகவின் தலைமைப் பொறுப்பு பிராமண சமூகத்திற்கு ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. ஏனென்றால், இப்போது உயர்மட்டத் தலைமை ஓ.பி.சி. சமூகத்தைச் சேர்ந்தது, எனவே கட்சியின் தலைமை பிராமணத் தலைவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று கட்சியும் ஆர்.எஸ்.எஸ்ஸும் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய தலைவர் ஆணா? பெண்ணா?
தலைவர் பதவி தொடர்பாக பிரத்யேகமாக இரண்டு வகையான தகவல்கள் கிடைத்துள்ளது. அதன்படி, தலைவர் பதவிக்கு 5 ஆண்கள் மற்றும் 2 பெண்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இந்த ஏழு பேரில் ஒருவரை மோடி அங்கீகரிப்பாரா அல்லது எட்டாவதாக ஒருவரை தேர்வு செய்து அதிர்ச்சி அளிப்பாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். பாஜக தலைவர் பதவி தொடர்பாக இதுவரை வெளிவந்த தகவல்களின்படி, தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு தலைவரின் பெயர் இறுதி செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அது ஒரு பெண்ணா அல்லது ஆணா என்பது சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது.
பாஜக தலைவராகும் தென்னிந்தியர்?
வெளியாகியுள்ள தகவல்களின்படி,
- மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி
- மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி
- பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்
- ஆந்திர பாஜக தலைவர் புரந்தேஸ்வரி
ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. மேற்குறிப்பிடப்பட்ட நான்கு பேரும் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களாவர்.
பிராமணர்களுக்கு முன்னுரிமை
மேற்குறிப்பிடட்ட நான்கு பேரும் பாஜக தலைவர் பதவிக்கான பந்தயத்தில் காணப்படும் தென்னிந்தியர்கள் ஆவர். தற்போதைய கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவருக்குப் பதிலாக ஒரு பிராமணரை பாஜக தலைவராக நியமிக்கலாம் என்ற மற்றொரு கோட்பாடு இப்போது உருவாகி வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், தென்னிந்தியர் மற்றும் பிராமணர் என்ற அடிப்படையில், தற்போதைய மத்திய உணவு வழங்கல் அமைச்சரான பிரஹ்லாத் ஜோஷி கட்சியின் தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார்.
கர்நாடகாவில் வசிக்கும் பிரஹலாத் ஜோஷி, 2004 முதல் பாஜக எம்.பி.யாக இருந்து வருகிறார். 63 வயதான பிரஹ்லாத் 1992 ஆம் ஆண்டு திரங்கா இயக்கம் மூலம் அரசியலில் நுழைந்தார். காஷ்மீர் காப்பாற்று இயக்கத்தை வழிநடத்தி கர்நாடகாவில் தனது முத்திரையைப் பதித்தார். மக்களவைத் தேர்தல்களில் 5 முறை வெற்றி பெற்றுள்ள அவர், தேர்தலுக்கான வியூக வகுப்பதில் ஒரு நிபுணராகக் கருதப்படுகிறார்.
கிஷன் ரெட்டிக்கு வாய்ப்பா?
ஜி கிஷன் ரெட்டியும் பாஜக தேசிய தலைவராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தற்போது மத்திய நிலக்கரி அமைச்சராக இருக்கும் அவர் தெலுங்கானாவில் பாஜகவின் தலைவராக உள்ளார். பிரதமரின் நம்பிக்கைக்குரியவராகக் கருதப்படுகிறார். 1994 ஆம் ஆண்டு, நரேந்திர மோடி முதல்வராகவோ அல்லது பிரதமராகவோ இல்லாத காலம் அது . முதல் முறையாக அமெரிக்கா சென்றார். இந்த சுற்றுப்பயணத்தில் ஜி கிஷன் ரெட்டியும் அவருடன் இருந்தார். ரெட்டி பாஜக யுவ மோர்ச்சாவின் தலைவராக இருந்துள்ளார். அவர் ஒன்றுபட்ட ஆந்திராவில் பாஜகவின் மாநிலத் தலைவராகவும் இருந்துள்ளார். அவர் தெலுங்கானாவில் பாஜகவின் தீவிர இந்துத்துவா தலைவராகக் கருதப்படுகிறார். கிஷன் ரெட்டி பிராமண சமூகத்தை சேர்ந்தவராக இல்லாமல் இருக்கலாம், ஆனால் தெலுங்கானாவில் அவரது சமூகம் உயர் பிரிவிலேயே இடம்பெறுகிறது.
வானதி ஸ்ரீனிவாசனுக்கு ஜாக்பாட்டா?
ஒரு பெண்ணை தேசிய தலைவராக நியமிக்க வேண்டும் என கருதினால், பாஜக மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனுக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. வானதி சீனிவாசனும் ஒரு தமிழ் பிராமணர், அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், வானதியை தலைவராக்குவதன் மூலம், பாஜக தெற்கை கவர முயற்சிப்பது மட்டுமல்லாமல், பிராமணர்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் கவனத்த ஈர்க்க முடியும்.
அண்ணாமலைக்கு பின்னடைவு?
தமிழக பாஜகவில் இருந்த பிரமாணர்களின் ஆதிக்கம், அண்ணாமலையின் எழுச்சிக்குப் பிறகு ஒடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சீனியர்களை ஓரங்கட்டுவதில் அவர் அதிக கவனம் செலுத்துவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், வானதி சீனிவாசன், எச். ராஜா போன்ற மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், பாஜக தேசிய தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை அது உறுதியானால், அது அண்ணாமலைக்கு பெரும் பின்னடைவாக அமையலாம்.
தெற்கை நோக்கி படையெடுக்கும் பாஜக:
2000 மற்றும் 2004 க்கு இடையில், அடல் பிஹாரி வாஜ்பாய் நாட்டின் பிரதமராக இருந்தபோது, பாஜக தென்னிந்தியாவிலிருந்து மூன்று தலைவர்களை பெற்றது. அவர்கள் தெலுங்கானாவைச் சேர்ந்த பங்காரு லட்சுமணன், தமிழ்நாட்டின் ஜனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆந்திராவின் வெங்கையா நாயுடு ஆவர். இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக மீண்டும் தென்னிந்தியாவிலிருந்து ஒருவரை தலைவராக்குவது குறித்து பரிசீலித்து வருகிறது. வடக்கில் தாமரையை மலரச் செய்த பாஜக, இப்போது தெற்கிலும் விரிவடைய விரும்புகிறது.