திமுக மாநில ஆதிதிராவிட நலக்குழு தென்மண்டல ஆய்வு கூட்டம் திருச்செந்தூர் ஐ.எம்.ஏ. மண்டபத்தில் இன்று நடைபெற்றது. ஆய்வுக் கூட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்துகொண்டு தி.மு.கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி: ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடக்கூடிய அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். அதுவும் சுயமரியாதையோடு கிடைக்க வேண்டும். அதே நேரத்தில் கல்வி, சமூக மதிப்பு, வேலை வாய்ப்பு அனைத்தும் உருவாக்கப்பட வேண்டும் என்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாடுபட்டு வருகிறார்.
எல்லோரும் ஒன்றாக வாழ முடியும்
திமுக மீது பல விமர்சனங்கள் வருகிறது. உயர்ந்த ஜாதியினருக்கு எதிரானவர்கள் என்ற கட்டமைப்பை உருவாக்கி வருகிறார்கள். இன்னொருபுறம், ஆதிதிராவிட மக்களுக்கு திமுக என்ன செய்ததது என கேள்வி கேட்கிறார்கள். எல்லோரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதற்காக முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி சமத்துவபுரத்தை உருவாக்கினார். எல்லோரும் ஒன்றாக வாழ முடியும் என்பதை உலகிற்கு உணர்த்தியவர் அவர்தான்.
அதே போல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு, உள்ஒதுக்கீடு தந்தவர் கலைஞர் கருணாநிதி. குடிசை மாற்று வாரியத்தைக் கொண்டு வந்தவர் அவர்தான். அதேபோல், ஒடுக்கப்பட்ட மக்களும் தொழில்முனைவோராக உருவாகி, அவர்களுக்குக் கீழ் பத்து பேர் வேலை செய்ய வேண்டும் என்பதற்காக அம்பேத்கர் பெயரில் திட்டத்தை உருவாக்கி தொழில் முனைவராக மாற்றுவதற்குத் திட்டத்தை தந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதேபோல் எத்தனையோ திட்டங்கள் திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு திமுகவின் சாதனைகளைப் பட்டியலிட்டுக் காட்ட முடியும்.
வாட்ஸ் ஆப்பில் பொய் செய்திகள்
திமுக இந்த மக்களை என்ன செய்கிறது என்று கேள்வி எழும். தேர்தல் நெருங்கி வருகிறது. வாட்ஸ் ஆப்பில் பொய் செய்திகளைப் போட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் மக்களைப் பிரித்துத் தான் குழப்பங்களை உருவாக்கி சிலர் வெற்றிகளைப் பெற்று இருக்கிறார்கள். இங்கேயும் நம்மைப் பிரிக்க சிலர் குழப்பம் செய்கிறார்கள். அந்த குழப்பம் வந்துவிடாமல் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
நம்முடைய சாதனைகளை இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஆட்சி தான் திமுக ஆட்சி. மக்களிடம் தெளிவாக இதை சொல்ல வேண்டும். தெருமுனை பிரச்சாரம், தெரு முனை கூட்டங்கள் நடத்தி திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்ல வேண்டும். இதை செய்தாலே நம்மை தாண்டி தமிழகத்தில் யாரும் வெற்றி பெற முடியாது. எந்த மாறுபாடு இல்லாமல் தேர்தல் வெற்றியைப் பெற வேண்டும்.
2026 தேர்தல் வெற்றி
வருகின்ற 2026 தேர்தல் வெற்றி என்பது மக்களாகிய உங்களுடைய கரங்களில் தான் இருக்கிறது. எனவே, கட்டுப்பாடோடு பணியாற்றினால் வெற்றி நிச்சயம் அண்ணன் தளபதி சொன்னது போல 200 தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றி பெறுவோம். நானும் இறுமாப்போடு சொல்கிறேன் வெற்றி நிச்சயம் எனப் பேசினார்.
கூட்டத்திற்கு, ஆதி திராவிடர் நலக்குழு மாநில செயலாளர் கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், திமுக ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ ., ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.