காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பாங்குழி ஊராட்சியில் உள்ள வடந்தாங்கல் ஏரி புனரமைப்பு செய்யும் பணியை துவக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் த.மோ அன்பரசன் கலந்து கொண்டு ரூபாய் 8 லட்சத்து 86 ஆயிரம் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தொடங்கி வைத்தார்.
பின்னர் ராமானுஜபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் குளம் சீரமைப்பு தொடர்பாக புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது பொதுப்பணி துறை சார்பாக விடப்படும் ஏலம் வேண்டாமென்றும், கிராம மக்கள் சார்பாக விடப்படும் ஏலத்தை செயல்படுத்த கோரிக்கை விடுத்த போது, அங்கு வந்து இருந்த கிராம மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தனர்.
அமைச்சர் கேட்ட கேள்விக்கு சரியான பதிலும் அளிக்காமல், அனைவரும் ஒரே நேரத்தில் ஒவ்வொரு கருத்தை பேசிக் கொண்டிருந்ததால் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஏய் உதைப்பேன் என கையை ஓங்கி பொதுமக்களை அதட்டினார். இதனை தொடர்ந்து அமைச்சர் அருகில் இருந்த மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியிடம் மக்களின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு மனுவை பெற்று மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்தார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் சிலரை முகம் சுளிக்க வைத்தது. ஆனால் புகார் அளிக்கவந்துவிட்டு புகாரை முறையாக கூறாமல் தங்களுக்குள் மாற்றி மாற்றி பேசிக்கொண்டால் யாருக்குதான் கோவம் வராது. அந்த வகையில் தான் அமைச்சர் உரிமையாக கையை ஓங்கி அதட்டியதாகவும் பொதுமக்கள் புரிந்து கொள்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்