காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் இருந்து டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தியின், சமாதி உள்ள வீர் பூமிக்கு கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி சார்பில்  வருடா வருடம் ஆகஸ்டு மாதம் ராஜீவ் ஜோதி மதநல்லிணக்க யாத்திரை புறப்பட்டு செல்வது வழக்கம். இந்த நிலையில் 31 ஆம் ஆண்டு ராஜீவ்ஜோதி மதநல்லிணக்க யாத்திரை தொடக்க விழா நேற்று ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் செவ்வாய்கிழமை ( நேற்று) நடைபெற்றது. இதில்  ஸ்ரீபெரும்புதூர்  சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வபெருந்தகை ஜோதியை ஏற்றிவைத்து யாத்திரையை தொடங்கி வைத்தார்.



 

 இதில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அளவூர் நாகராஜ், ராஜீவ்காந்தி நினைவிட சீரமைப்பு குழு உறுப்பினர் முருகானந்தம், ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் தலைவர்  எஸ்.ஏ.அருள்ராஜ், உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். இந்த மதநல்லிணக்க ஜோதி யாத்திரை ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தொடங்கி பல்வேறு மாநிலங்களின் வழியாக சாலை மார்கமாக சென்று டெல்லியில் உள்ள ராஜீவ்காந்தியின் சமாதி உள்ள வீர்பூமியில் வரும் 19ம் úதி காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியாகாந்தி, ராகுலகாந்தி ஆகியோரிடம் கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி துணைத்தலைவர் துரைவேலு  ஒப்படைக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 



இந்நிலையில் இன்று திடீர் திருப்பமாக,  சென்னை வடக்கு மாவட்ட தலைவர் திரவியம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர்  ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ஜோதி ஏற்றி நினைவிடத்தில் இருந்து கொண்டு சென்றார். முன்னதாக ராஜீவ் காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தி வணங்கி ஜோதி யாத்திரை நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட தலைவர் நாகராஜ் ஆகியோர்   கலந்து கொண்டனர்.



 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கூறுகையில், மாவட்ட தலைவர் திரவியம், சாலை வழியாக சுமார் 2500 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, ஜோதியை டெல்லி எடுத்துச் செல்ல உள்ளனர். இதனை வருங்கால பிரதமர் ராகுல் காந்தி அவர்கள் கையில் கொடுக்க உள்ளனர். இதன் நோக்கம் ராஜீவ் காந்தி அவர்களின், நினைவுபடுத்தும் விதமாக  இருக்கும், அதேபோல காங்கிரசுக்கு எழுச்சியாக அமையும் , கண்டிப்பாக 2024 ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என தெரிவித்தார்.



 

இது குறித்து சாமுவேல் திரவியம் கூறுகையில், ராஜீவ் காந்தி அவர்களின் 31 வது பிறந்த நாளில் பிறந்தநாளில், இந்த ஜோதியை தில்லி வரைக்கும் எடுத்துச் செல்கின்றோம்.தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தொண்டர்கள் சார்பாக மற்றும் இந்த ஜோதி என்பது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தரை வழியை வழக்கமாக 2500 km சென்று 19ஆம் தேதி காலையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிடம் ஒப்படைத்து. 20ஆம் தேதி அங்கே ராஜ்காட்டில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி அவர்கள் சமாதியில் நாங்கள் பிரார்த்தனை செய்ய உள்ளோம். இதற்காக எங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்த ராஜூ காந்தி நினைவுத்தினுடைய அறக்கட்டளை உறுப்பினர்  முருகானந்தம் அவர்களுக்கும் மற்றும் இதற்கு அனுமதி அளித்த அகில இந்திய பொதுச் செயலாளர்  தினேஷ் குண்டு ராவ் அவர்களுக்கும் , தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்தார்.



ஒரே ஜோதி யாத்திரைக்கு இரண்டு துவக்க விழாக்கள் நடைபெற்று, இரண்டு ஜோதிகள் செல்வது காங்கிரஸ் கட்சியினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு துவக்க விழாவிலும் கொண்டுவரப்பட்ட பேனரில்  "ராஜு ஜோதி யாத்திரை என பொறிக்கப்பட்டிருந்தது" என்பது குறிப்பிடத்தக்கது.