கர்நாடகா பாணியிலேயே முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் பிரதமர் மோடியை மட்டுமே முன்னிருத்தி மத்திய பிரதேச தேர்தலை பாஜக சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றது. 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் கடைசி ஆண்டில் பசவராஜ் பொம்மையை கர்நாடகாவின் முதலமைச்சராக நியமித்தது பாஜக தலைமை. ஆனால் பசவராஜ் பொம்மை தலைமையிலான ஆட்சி மீது பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், பொதுமக்களிடம் அதிருப்தி அதிகமானது. இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்திற்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், வேட்பாளர் அறிவிப்பில் பல்வேறு சீனியர்களுக்கு வாய்ப்பளிக்காமல் புதியவர்களுக்கு வாய்ப்பளித்தது. இதனால் அதிருப்தியில் இருந்த சீனியர் பாஜகவினர் மற்றும் காங்கிரஸில் இருந்து பாஜகவிற்குப் போனவர்கள் மீண்டும் காங்கிரஸுக்கே திரும்பினர். அதோடு முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் பிரதமர் மோடியை மட்டுமே முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது பாஜக. கர்நாடக தேர்தலின் போது பிரதமர் மோடி அம்மாநிலத்திற்கு அடிக்கடி வருகை தந்து தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். எனினும் அக்கட்சி சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வியடைந்தது.


இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானை ஓரம்கட்ட பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாஜகவில் அதிக ஆண்டுகளாக முதலமைச்சராக பதவி வகித்து வருபவர் சிவ்ராஜ் சிங் சவுகான் தான். மத்திய பிரதேசத்தில் 18.5 ஆண்டுகள் பாஜக ஆட்சியில்  15 ஆண்டுகள் முதலமைச்சராக பதவியில் இருந்திருக்கிறார். இந்த ஆண்டின் இறுதியில் மத்திய பிரதேசத்திற்கு சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் பாஜக தேர்தல் வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்து மூன்று கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துவிட்டது. 230 தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் 78 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது. அதில் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங்கின் பெயர் அறிவிக்கப்படவில்லை. அதோடு, பிரச்சாரங்களிலும் பிரதமர் மோடியை மட்டுமே பிரதானமாக பயன்படுத்துகிறது பாஜக தலைமை. கர்நாடகாவைப் போலவே மத்திய பிரதேசத்திலும் சீனியர்களை கட்டம்கட்டப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் ஏழு பேரை சட்டமன்றத்தேர்தலில் களமிறக்கவும் முடிவு செய்திருக்கிறது பாஜக. ஏழு பேரில் நரேந்திர சிங் தோமர், ப்ரஹ்லாத் சிங் பட்டேல், ஃபக்கன் சிங்  குலஸ்தே (Faggan Singh Kulaste) ஆகிய மூன்று பேர் ஏற்கனவே மத்திய அமைச்சர்களாக இருந்துவரும் நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர்களை களமிறக்குகிறது. இவர்களோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணேஷ்  மந்திரி , ராகேஷ் சிங், ரீதி பதக் உள்ளிட்ட 7 பேரில் 4 பேர் ஏற்கனவே எம்எல்ஏக்களாக இருந்தவர்கள். இந்த தேர்தலில் பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகக் கூறப்படுகிறது. விஜயவர்கியா கடந்த 2013ம் ஆண்டுத் தேர்தலில் ம்ஹவ் (Mhow) தொகுதியில் வெற்றிபெற்ற நிலையில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது இந்தூர் தொகுதியில் அவரை மீண்டும் களமிறக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல நரேந்திர சிங் தோமரை 20 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலில் களமிறக்குகிறது. 


சிறுபான்மையினருக்கு எதிரான புல்டோசர் கலாச்சாரத்தை ஊக்குவிப்பது, இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பு, பசு குண்டர்களால் ஏற்பட்ட வன்முறைகள், வேலை வாய்ப்பின்மை, அதிகரிக்கும் வறுமை, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மீதான அடக்குமுறைகள், மலிந்துவிட்ட ஊழல் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் சிவ்ராஜ் சிங் சவுகான் அரசு மீது எழுந்துள்ளது. பொதுமக்கள் சவுகான் அரசு மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் சிவ்ராஜ் சிங் சவுகானை கழற்றிவிட பாஜக மேலிடம் முடிவு செய்திருப்பதாக செய்திகளில் வெளிவந்த வண்ணம் உள்ளது. கர்நாடகாவைப் போலவே, ஃபோன் பே 50% கமிஷன் என்று சிவ்ராஜ் சிங் சவுகான் புகைப்படத்துடன் மத்திய பிரதேசம் முழுவதும் காங்கிரஸ் போஸ்டர் அடித்து ஒட்டியது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனால், சிவ்ராஜ் சிங் சவுகானை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து களம் காண்பதற்கு பதிலாக பிரதமர் மோடியையே முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


ஆனால் தன்னை பாஜக ஓரம்கட்டவில்லை என்றும் அனைத்து சீனியர்களும் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும் சிவ்ராஜ் சிங் தெரிவித்துள்ளார். அதேவேளையில்,  தேர்தலுக்குப் பிறகு முதலமைச்சராக வேறு யாராவது பெரிய தலைவர் வரலாம் என்றும் கூறியுள்ளார். 


அதிருப்தி உள்ள தலைவர்களையும், சீனியர் தலைவர்கள் பலரையும் பாஜக ஏற்கனவே ஓரம் கட்டிவிட்ட நிலையில் எடியூரப்பா, பசவராஜ் பொம்மைக்கு அடுத்து இந்த பட்டியலில் சிவ்ராஜ் சிங் சவுகானும் இணைவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கர்நாடகாவில் தேர்தல் முடிந்து 4 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் தற்போது வரை எதிர்கட்சித் தலைவர் யார் என்பதை பாஜக அறிவிக்காததை சுட்டிக்காட்டுகின்றனர் விமர்சகர்கள். அதிருப்தி தலைவர்களை ஓரம் கட்டுவது பாஜகவின் வழக்கமான பாணி தான் என்றாலும் கர்நாடகாவை போல சொதப்புமா? அல்லது வெற்றியை தேடித்தருமா என்பது விரைவில் தெரியவரும்.