தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளதால், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், ஒவ்வொரு கட்சியினரும் தங்களது எதிர்க்கட்சியினரை கடுமையாக தாக்கி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவின் பேச்சு,கடும் சர்ச்சையை கிளப்பியது. சமூக வலைதளங்களில் அவரது பேச்சுக்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆ.ராசாவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மன்னிப்பு கோரினார்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் கமல்ஹாசனுக்கு எதிராக போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசன், கமல்ஹாசன் சினிமாவில் இத்தனை நாள் உதட்டுச் சேவை மட்டும்தான் செய்தார் என்று பரப்புரையில் பேசினார். அவரது பேச்சுக்கு மக்கள் நீதிமய்ய தொண்டர்களும், நிர்வாகிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, வெற்றிக்கான வேட்கையில் பண்பற்ற வார்த்தைகள் நாற்புறமும் நாராசமாய் ஒலிக்கின்றன. எதிர் தரப்பை எதிரி தரப்பென கருதுவது முதிர்ச்சியின்மை. யாகாவாராயினும் நாகாப்போம் சொல் இழுக்கற்று. தலைமுறை நம்மைக் கவனிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.