காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் நடிகரும், மக்கள் நீதிமய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் தனது கட்சியின் தொழிற்சங்கத்தை நேற்று தொடங்கினார். அவரது இல்லத்தில் நடைபெற்ற அறிமுக விழாவில் பங்கேற்று பேசிய கமல்ஹாசன், “மக்கள் நீதிமய்யத்திற்கென்று அடிப்படை தகுதி என ஒன்று இருக்கிறது. அது நேர்மை அது இங்கே மிக அவசியம். கண்ணதாசன் வசனம், கலைஞர் வசனம், இளங்கோவன் அவர்களுடைய வரிகளை புரிந்துகொண்ட தமிழகத்தில், என் வசனம் புரியாதா? நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும்.




எவருக்கும் தோல்விகள் ஏற்படும். ஆனால், ஒருவருடைய தோல்விக்கு இவ்வளவு பேர் வருத்தப்பட்டு நான் பார்ப்பது இதுவே முதல்முறை. இந்திய வரைபடத்தை கிழிக்க முயற்சிக்கும் திட்டத்தை முறியடிக்க வேண்டும். லாங்லிவ் தமிழ்நாடு. எனது தலைவர் காந்தி என்று சொல்வதால் எனக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காந்தி மாதிரியான ஆட்கள்தான் இன்று தேவை. இனி காந்தி போன்ற ஆட்களால்தான் இந்தியாவில் நல்ல அரசியல் செய்ய முடியும். ஆசியாவில் முதல் நடுநிலையான கட்சி மக்கள் நீதிமய்யம்” இவ்வாறு அவர் பேசினார்.


தமிழகத்தின் பா.ஜ.க. தலைவராக பொறுப்பு வகித்து வந்த எல்.முருகன் கடந்த வாரம் மத்திய இணை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, மத்திய அரசின் இணையதளத்தில் எல்.முருகன் பிறந்த இடம் கொங்குநாடு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து, தமிழ்நாட்டில் இருந்து கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய 10 மாவட்டங்களை உள்ளடக்கி தனியாக கொங்குநாடு என்ற மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் சிலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் இந்த கருத்தை வலியுறுத்தி டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.


பா.ஜ.க.வினரின் இந்த கருத்திற்கு தி.மு.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமியும் கொங்குநாடு தனி மாநிலம் வேண்டும் என்ற கருத்து சிறுமைத்தனமானது என்று கண்டனத்தை பதிவு செய்தார். தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் மத்திய அரசு என்ற வார்த்தைக்கு பதிலாக ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து வந்த பா.ஜ.க.வினர் கொங்குநாடு என்ற புதிய விவகாரத்தை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, தமிழக பா.ஜ.க. ஊடகப்பிரிவு தலைவர் கொங்குநாடு தனி மாநிலம் என்பது பா.ஜ.க.வின் கருத்து இல்லை என்று விளக்கம் அளித்தார். இந்த நிலையில், பா.ஜ.க.வின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்திய வரைபடத்தை கிழிக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.