மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி 7 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.


கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் அன்றைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் காலமானார். தொடர்ந்து திமுக தலைவராக இருந்த கருணாநிதியும் வயது மூப்பால் அரசியலில் இருந்து ஓய்வு பெற தொடங்கினார். இத்தகைய நேரத்தில் அரசியலில் ஏற்படுத்த வெற்றிடத்தை நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி நிரப்புவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென “மக்கள் நீதி மய்யம்” என்ற கட்சியை தொடங்கி ஆரம்பமே அதிரடி காட்டினார் கமல்ஹாசன்.


2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி காலை அப்துல்கலாம் குடும்பத்தினரிடம் ஆசி பெற்றார். தொடர்ந்து அப்துல்கலாம் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து ராமநாதபுரம், பரமக்குடி, மானா மதுரை ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அன்று மாலை 6.30 மணியளவில் மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் “மக்கள் நீதி மய்யம்” என்ற கட்சியை அறிவித்து கொடியையும் அறிமுகம் செய்தார். 






அக்கட்சி இன்று 7வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.  இதுதொடர்பாக எக்ஸ் வலைத்தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம். மக்களுக்கு அவர்களுடைய கடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது.


ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் இழுக்கவேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடு. மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. சாதி மதச் சழக்குகள் இருக்கும்வரை, வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை, ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது” என தெரிவித்துள்ளார்.