முன்னாள் அதிமுக மக்களவை உறுப்பினர் கே.சி. பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் ஒரு கருத்தினை பதிவு செய்துள்ளார். அதில், “இந்திய அரசியல் சரித்திரத்தில் கூட்டணியில் இடம் பெற்ற கட்சியை அரவணைத்துக் கொண்டே அழித்து, ஆசுவாசம் அடையக் கூடிய ஒரே கட்சி என்ற விமர்சனத்தை அதிகம் எதிர்கொண்டிருப்பது பாஜக தான். அரசியலில் வெல்வது தான் இலக்கு. வெல்லும் வழிகள் இதுதான் என்கிற வரையறை எதுவும் இல்லை. தேர்தல் அரசியலில் தோற்றுப் போகவா நாங்கள் இருக்கிறோம்? இதுதான் மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் சாணக்கியருமான அமித்ஷா ஒருமுறை அளித்த பதில். இது உண்மை தான்.


நாடு விடுதலை அடைந்த காலம் முதல் கட்சிகள் உருவாவதும், காணமல் போவதும் இயல்பான ஒரு அரசியல் நடவடிக்கை தான். ஆனால் அண்மைக் காலமாக, ஒரு கட்சியை கூட்டணியில் சேர வைத்து, தயவு தாட்சண்யம் பார்க்காமல், அந்த கூட்டணி கட்சியை கழுத்தை நெறித்து அழித்தொழிக்கும் அட்டகாசமான ஆட்டத்தை பாஜக வெற்றிகரமாக செய்து வருகிறது.


சிக்கி சிதைந்த நிதிஷ் கட்சி


பாஜகவின் இந்த வேட்டையில் சிக்கிய கட்சிகளின் பட்டியல் ஏராளம். பீகார் மாநிலத்தில் இப்போது எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்தை நடத்தி வரும் முதல்வர் நிதிஷ்குமார், பாஜகவின் நெருங்கிய சகாதான். பாஜகவும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணியாக இருந்த போதே, அந்த கட்சியின் எதிர்க்கட்சி அந்தஸ்தை பறிக்கும் வகையில் ஜேடியூ எம்.எல்.ஏக்களை வளைத்தது. அவ்வளவு ஏன் சட்டசபை தேர்தலில் பாஜக- ஜேடியூ கூட்டணி அமைத்து, தொகுதி பங்கீடும் அறிவித்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர். ஆனால் பாஜக, லோக் ஜனசக்தியுடன் தனி கூட்டணி அமைத்தது. அந்த லோக் ஜனசக்தியோ, நிதிஷ்குமாரின் ஜேடியூ கட்சி போட்டியிடும் வேட்பாளர்களை எதிர்த்து மட்டும் போட்டியிட்டது. அப்புறம் என்ன ஜேடியூவை விட பாஜக அதிக இடங்களை வென்றது. இதனைத்தான் உறவாடிக் கெடுப்பது என்பார்கள்.


பாஜக பிடியில் அதிமுக


இந்த கதைகள் நமக்கு எதற்கு என்கிறீர்களா? தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக என்பது பாஜகவின் பிடியில் இருந்து வருகிறது. அப்போது முதலே அதிமுகவை எப்படியாவது பாஜக அழித்து விடும். தமிழ்நாட்டில் திமுக- அதிமுக என்கிற இருதுருவ அரசியலை அழித்து, திமுக- பாஜக என்ற நிலைமையை ஒருநாள் உருவாக்கத்தான் போகிறது என்பது அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கையாகத்தான் இருந்தது. இதற்கான எத்தனையோ அடையாளக் குறியீடுகளை பாஜக தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.


அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலை முன்வைத்து அதிமுகவுக்குள் பாஜக ஆடுபுலி ஆட்டத்தை தொடங்கி விட்டது என்கின்றன தகவல்கள். தமிழ்நாடு, புதுவையில் உள்ள மொத்தம் 40 லோக்சபா தொகுதிகளில் பாஜக கேட்பது 20 இடங்கள். இதில் தமிழ்நாட்டில் ஏற்கனவே 9 தொகுதிகளை பாஜக தன்னிச்சையாகவே எடுத்துக் கொண்டு விட்டது. மேலும் 11 தொகுதிகளையும் அதிமுகவிடம் இருந்து பாஜக பறித்துக் கொள்ள பார்க்கிறது. 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக எப்படியும் 10 தொகுதிகளில் வெல்ல வேண்டும் என கணக்குப் போடுகிறது.


அதிமுகவில் ஒரு ஏக்நாத் ஷிண்டே


அதிமுகவின் தயவு இல்லாமல் 10 தொகுதிகளில் வெல்ல முடியாது என்பது பாஜகவுக்கு தெரியும். இதனால் தான் அதிமுகவில் ஒரு ஏக்நாத் ஷிண்டே, அதாவது எந்த நேரத்தில் கட்சியை கபளீகரம் செய்வார் என தெரியாத துரோகி ஒருவரை தயார் நிலையில் வைத்திருக்கிறதாம் பாஜக. அதிமுக ஆட்சிக் காலத்திலேயே அந்த ஏக்நாத் ஷிண்டேவின் செல்வாக்கு பேசு பொருளாகத்தான் இருந்தது. தற்போது ஏகப்பட்ட வழக்குகளை சுமந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவிடம் ஒட்டு மொத்தமாக சரணாகதி அடைந்து நிற்கிறாராம்.


பாஜகவுக்கு 20 சீட் கொடுங்க, இந்த ஏக்நாத் ஷிண்டே தான் இப்போது, அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 சீட் கொடுத்து தான் ஆக வேண்டும் என கட்சிக்குள் மல்லுக்கட்டுகிறாராம். அத்துடன் தமது கட்டுப்பாட்டில் 5 தொகுதிகளை பாஜக வசம் ஒப்படைக்க வேண்டும். அந்த 5 தொகுதிகளிலும் பாஜகவை ஜெயிக்க வைத்தாக வேண்டும். அது ஏன் என்பது உங்களுக்கும் தெரியும் அல்லவா? என கட்சி தலைமையில் நேரடியாக பேரம் பேசி இருக்கிறார் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே. அதெல்லாம் முடியாது என வெளிப்படையாக சொல்ல முடியாமல் கட்சி தலைமை கதிகலங்கிப் போய் கிடக்கிறதாம்.


மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரும் போது சில பல அசாதரண நிகழ்வுகள் உருவாக்கப்படும்.. அதில் ஏக ஆதாயம் உங்களுக்குதானுங்க என அதிமுக ஏக்நாத் ஷிண்டேவுக்கு அந்த நாற்காலி பதவி ஆசையை இடைவிடாமல் காட்டுகிறதாம் பாஜக. இதனை சகாக்களிடம் சொல்லி, சொல்லி, இலக்கு வைத்த லோக்சபா தொகுதிகளில் தன்னிச்சையாக பாஜகவுக்கு தேர்தல் பணிகளையும் அதிமுகவின் ஏக்நாத் ஷிண்டே தொடங்கியும் விட்டார் என்கின்றன அவருக்கு மிக நெருக்கமான வட்டாரங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.