தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.56 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் சீர்மிகு நகரம் மற்றும் 15-வது நிதிக் குழுத் திட்டங்களின் கீழ் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா புதிய பஸ்நிலையம் அருகே உள்ள போக்குவரத்து கழக பணிமனையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கனிமொழி எம்.பி தலைமை தாங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு ரூ.53 கோடியே 25 லட்சம் மதிப்பிலான, பல அடுக்கு வாகனங்கள் நிறுத்தும் இடம், டோபிகானா, 8 பூங்காக்கள், வளமீட்பு மையம், மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுபாட்டு மையம், அரசு போக்குவரத்து கழக பணிமனை ஆகியவற்றை திறந்து வைத்து பேசினார்.
அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், புதிதாக தொடங்கப்படவுள்ள முக்கியமான திட்டப்பணிகள் குறித்தும், மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்தும் மாவட்ட கலெக்டர் மூலமாக துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் ரூ.899.95 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டங்கள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சில திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் சில திட்டங்கள் நடந்து முடியும் நிலையில் இருக்கிறது. திருச்செந்தூர் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், காயல்பட்டினம் நகராட்சியில் திட்டப்பணிகளை விரைந்து முடித்து தர வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன் வைத்து உள்ளார். அதே போன்று கனிமொழி எம்.பி, அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்றும், புதிதாக போடப்படும் சாலைகள் மண் சாலையின்றி முழுமையாக தார் சாலையாக அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து உள்ளார்கள். அனைவரது கோரிக்கையும் நிறைவேற்றப்படும்.
தூத்துக்குடி மாநகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பழைய பஸ் நிலையம், வணிக வளாகம் அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் முடிக்கப்படும். முதல்-அமைச்சர் நகர்ப்புற உள்ளாட்சிகளில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். மேலும், திட்டப்பணிகளுக்கு தேவையான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளார். எனவே திட்டப்பணிகள் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறினார்.
விழாவில் கனிமொழி எம்.பி. பேசும் போது, தூத்துக்குடி மாவட்டத்தில் சாலை, குடிநீர் வசதிகள் செய்து தருவதற்கான உறுதியை அமைச்சர் அளித்து இருக்கிறார். தமிழக முதல்-அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சரிடம், 20 நாட்களில் முடிக்க வேண்டிய பணிகளை 2 நாளில் முடித்து தந்துவிடுவார் என்ற நம்பிக்கையுடன் எந்த ஒரு வேலையையும் ஒப்படைப்பார். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்துக்கு தேவையான திட்டங்களை விரைந்து முடித்து தருவீர்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ள திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், புதிதாக தொடங்கப்படவுள்ள முக்கியமான திட்டப்பணிகள் குறித்தும், மாவட்டத்துக்கு தேவையான திட்டங்கள் குறித்தும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
பின்னர் அமைச்சர் நேருவிடம்... செந்தில் பாலாஜி வீட்டில் வருமான வரி சோதனை குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு? ஒண்ணுக்கு போறது, வெளிய போறது, லைட் போடுறது, குடிநீர், குடிசை போடுறது இதை மட்டும் கேளுங்க.. வேறு ஏதும் தெரியாது என்று கூறி சென்றார்.மேலும், கனிமொழி எம்பியிடம் கேட்டதற்கு எனக்கு ஏதும் தெரியாது எனவும், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கு கொள்ள கலந்து கொள்வீர்களா என்ற கேள்விக்கு? எந்த பதிலும் கூறாமல் புறப்பட்டு சென்றார்