தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமானவர் எடப்பாடி பழனிசாமி. இவர் கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் சேலம் மாவட்டத்தின் எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்றார். மக்கள் வாக்களிக்கும் பொதுத்தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது சொத்துக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதி.


எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு:


இதன்படி, எடப்படாடி பழனிசாமியும் 2021ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும்போது தனது சொத்துக்கணக்கை தாக்கல் செய்தார், அவர் தாக்கல் செய்த சொத்து விவரத்தில் ரூபாய் 1 கோடி அளவிற்கு சொத்து மதிப்பை குறைத்து காட்டியதாக தேனி மாவட்ட தி.மு.க. முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் மிலானி சேலம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு விசாரித்த சேலம் சிறப்பு நீதிமன்றம் விரிவான விசாரணை நடத்தி 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தனர்.


சாட்சியாக சேர்க்கப்பட்ட ஓ.பி.எஸ்.


இந்த நிலையில், புகார்தாரர் அளித்த தகவலின் அடிப்படையில் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக புகார்தாரரான மிலானி அளித்த 1338 பக்க ஆவணங்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான சொத்து மதிப்பை குறைத்துக்காட்டிய வழக்கில் அவரது எதிர்துருவமாக கருதப்படும் ஓ.பன்னீர்செல்வம் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த வழக்கு தேர்தல் தொடர்பானது என்றும், விசாரணைக்கு உகந்ததில்லை என்றும், இந்த விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவிற்கு பதில்மனுத்தாக்கல் செய்ய  தமிழக அரசு அவகாசம் கோரியிருந்த நிலையில், வழக்கின் விசாரணை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக, அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும். ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்ட பிறகு பொதுக்குழு, ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியது, நீதிமன்ற விசாரணை என பல நிகழ்வுகளுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார். இந்த சம்பவங்கள் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இ,பி.எஸ்.க்கு எதிரான வழக்கில் ஓ.பி.எஸ். சாட்சியாக சேர்க்கப்பட்டிருப்பது இரு தரப்பு ஆதரவாளர்கள் மத்தியிலும் எதிர் தரப்பினர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க: IT Raid: வருமான வரித்துறையினருடன் மோதல் விவகாரம்; 50க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் மீது வழக்குப்பதிவு


மேலும் படிக்க: High Court: மெரினா கடற்கரையில் நேரக்கட்டுப்பாடு? போலீஸ் துன்புறுத்தல்? - ஆதாரம் கேட்ட உயர்நீதிமன்றம்