‛‛ஆணவமானார்... ஆதிக்கம் மனப்பான்மை கொண்டவம்... அடக்கி ஆள்பவர்...’ என்றெல்லாம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சிலர் அடையாளப்படுத்துவதுண்டு. உண்மையில் ஜெயலலிதாவின் உண்மை முகம் அப்படி அல்ல; அவர் சந்தித்த அனுபவங்களும், எதிர்கொண்ட சவால்களும் தான், ஜெயலலிதாவை பிந்நாளில் அவ்வாறு மாற்றியது அல்லது, அவரை வடிவமைக்க காரணமானது என்பார்கள், விவரம் அறிந்தவர்கள். 





தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் அதிமுக என அடிக்கடி சொல்வார்கள். ஆம், எம்.ஜி.ஆர்., என்கிற தலைவனை தூக்கிப் பிடித்து ஆட்சியில் அமர வைத்த தொண்டர்களின் கட்சி தான் அதிமுக. அந்த அதிமுகவில் 1982 ல் இணைந்தவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர்.,யின் அன்பைப் பெற்ற ஜெயலலிதா, அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், ராஜ்யசபா எம்.பி.,யாகவும் பொறுப்புகளைப் பெற்று, அதிமுகவின் தொண்டராகவே பணிகளை கவனித்தார். காரணம், எம்.ஜி.ஆர்., என்கிற ஆலமரத்தின் அடியில் தான் ஒட்டுமொத்த அதிமுகவும், இளைப்பாறியது. 




எம்.ஜி.ஆர்., மறைந்த பின் அதிமுக யாருக்கு? என்கிற போட்டி வந்த போது, எம்.ஜி.ஆர்.,யின் மனைவி ஜானகி ஒரு அணியாகவும், எம்.ஜி.ஆர்.,யின் அன்பை பெற்ற ஜெயலலிதா மற்றொரு அணியாகவும் பிரிந்தனர். இருதரப்பிலும் முக்கிய தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் இரண்டாக பிரிந்து நின்றனர். 1989 ல் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்க, அதிமுக பிளவுபட்டு, இரண்டாக நின்றது. அதுவரை தொடர்ந்து ஆளுங்கட்சியாக தமிழ்நாட்டில் கோலோச்சிய கட்சி, இரண்டு பட்டு போயிருந்த போது, ‛இனி இந்த கட்சி அவ்வளவு தான்...’ என்கிற பேச்சே பரவலாக இருந்தது. 


1989ல் தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா, அதில் வெற்றி பெற்று, முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அந்த தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தாலும், முதல் பெண் எதிர்கட்சி தலைவராக அப்போது ஜெயலலிதா பொறுப்பேற்றார். கட்சியின் பலவீனம் அறிந்து, ஜெ., அணி -ஜா., அணியாக பிரிந்து கிடந்த அதிமுக, அதன் பின் ஒருங்கிணைந்தது. ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். ஜானகி, அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். 




அதன் பின் புலிகள் நிலைப்பாட்டில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது, 1991 ல் மீண்டும் சட்டமன்ற தேர்தல் வந்தது. அதில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக வெற்றி பெற்றது. தேர்தல் மூலம் தேர்வான முதல் பெண் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றார். அந்த நாள் தான், இன்றைய நாள். ஆம்... 167 இடங்களில் போட்டியிட்டு 163 இடங்களில் வெற்றி பெற்று 1991 ஜூன் 24 இதே நாளில் தான், முதன் முதலாக பிளவுபட்ட அதிமுகவை ஒன்றிணைத்து, முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்ற நாள். 


எம்.ஜி.ஆர்.,க்கு பின் அதிமுக அழிந்ததாக நினைத்த நிலையில், தனது 43 வது வயதில் மீண்டும் அதிமுகவை கட்டமைத்து, தமிழ்நாட்டில் இழந்த ஆட்சியை அதிமுக மீண்டும் நிலைநாட்டிய நாள் இன்று.  31 ஆண்டுகளுக்குப் பின் , இன்றைய நாளில் அதிமுகவின் நிலையைப் பார்த்தால், கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆர்., மறைந்த பிறகு என்ன நிலையில் இருந்ததோ, அதே நிலைக்கு வந்துள்ளது. 


ஜெயலலிதா மறைந்த போது இதே போல சூழலை அதிமுக சந்தித்தது. ஆனால் அன்று, ஆட்சி கையில் இருந்ததால், சமரசம் செய்ய அதிகார மையங்கள் இருந்ததால், அதிமுக காப்பாற்றப்பட்டது; அல்லது, தற்காலிகமாக பிரச்சனை தீர்க்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்குப் பின், மீண்டும் அதே நிலைக்கு ‛ரிவர்ஸ்’ நிலைக்கு அதிமுக மாறியிருக்கிறது. இது தலைவர்களுக்கு இடையேயான மோதல். தலைமை யார் என்கிற மோதல். கட்சிகளில் மோதல் புதிதல்ல. ஆனால், அது தொண்டர்களுக்கு இடையே இருக்கும் போது, அதை சமரசம் செய்ய தலைமை இருக்கும். இங்கு தலைமைகளுக்குள் மோதல் இருக்கும் போது, யார் சமரசம் செய்வது? 31 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் ஆட்சி அமைத்து, ‛அதிமுகவுக்கு அழிவில்லை...’ என்று ஜெயலலிதா நிரூபித்தார். ஆனால் இன்று அதிமுகவின் நிலை தான் என்ன? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!