அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்று முடிந்தது. ஒற்றைத் தலைமையை வலியுறுத்தி பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிராகரிப்பதாக அறிவித்ததால், கட்சியில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டத்தின் பாதியில் இருந்தே வெளியேறினார்.
அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் கடுமையான பின்னடைவைச் சந்தித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலையே டெல்லி சென்றார். அவர் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பதவி வேட்புமனுத்தாக்கலில் பங்கேற்க செல்வதற்காக சென்றுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
இந்த நிலையில், டெல்லியில் இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் சென்று வரும் ஜூலை 11-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழுவிற்கு எதிராக தேர்தல் ஆணையத்தை அணுகவில்லை என்று வைத்திலிங்கம் விளக்கம் அளித்துள்ளார்.
பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளரான திரௌபதி முர்முவின் வேட்புமனுத் தாக்கலில் மதியம் பங்கேற்றார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் ஆகியோருடன் ஓ.பன்னீர்செல்வமும் உடன் சென்றார். இந்த நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க பிரதமர் அலுவலகத்திடம் ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் நிகழ்ந்து வரும் பரபரப்பான சூழலில், சென்னையில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருப்பதும் அ.தி.மு.க.வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் முகாமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் பிரதமரிடம் காவிரி நதிநீர் பிரச்சினை குறித்து விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த சந்திப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு, ஒற்றைத்தலைமை விவகாரம், எடப்பாடி தரப்பினருடனான மோதல் குறித்து தீவிரமாக ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க : நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு செல்லவில்லை..! பொதுக்குழுவை கூட்ட ஓ.பி.எஸ்.க்கே அதிகாரம்..! - வைத்திலிங்கம்
மேலும் படிக்க : திமுக ஒன்னும் சந்தோஷப்பட வேண்டாம்... உதயநிதி பட்டாபிஷேகத்தப்போ பாக்கறோம்... சி.வி.சண்முகம் பதிலடி!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்