சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தரான சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் அரசியல் ஆர்வம் கொண்ட மாணவர்கள் அதனை பல்கலைக்கழகத்திற்கு வெளியில் தொடர வேண்டும் எனக் கூறியுள்ளார். 


டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தரான சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் அதே நேர்காணலில் மொழி என்பது மிக முக்கியமான விவகாரம் எனவும், அதனை அளவுக்கு அதிகமாக கையாண்டால் அது பிராந்தியவாதத்தில் முடியும் எனவும் கூறியுள்ளார். 


ஜே.என்.யூ துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட், `ஜே.என்.யூ என்பது அரசியல் லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ளும் இடமல்ல.. பல்கலைக்கழக வளாகத்தில் இதற்கு முன்பாக அரசியல் செய்தவர்கள் தற்போது சிறையில் இருக்கின்றனர். மொழி என்பது சற்றே முக்கியமானதொரு விவகாரம்.. குறிப்பிட்ட ஒரு மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது பிராந்தியவாதத்தில் முடியும்’ எனக் கூறியுள்ளார். 


தேசிய புதியக் கல்விக் கொள்கையில் பல மொழிகளுக்கான இடம் கொடுத்திருப்பது தொடர்பாக பேசிய ஜே.என்.யூ துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் மாநில மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் வழங்கும் போது, கவனமாக இருக்கும்படியும், அது மாநில அடையாளங்களுக்கு பலம் தருவதாக இருக்கக் கூடாது எனவும் கூறியுள்ளார். 



இதுதொடர்பாக பேசிய சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட், `தேசிய புதியக் கல்விக் கொள்கையில் பல மொழிக் கல்வி ஆதரிக்கப்பட்டிருப்பதை நானும் வரவேற்கிறேன்.. ஆனால் எனக்கு ஒரே ஒரு கருத்து வேறுபாடு இருக்கிறது. இந்தியாவின் அனைத்து 27 மொழிகளையும் எப்படி கற்றுக் கொடுக்கப் போகிறோம் என்பதே அது. மொழிகளின் மீது நாம் சற்றே கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனெனில் மொழி என்பது நமது அடிப்படை அடையாளத்தைத் தீர்மானிக்ககூடியது’ எனக் கூறியுள்ளார். 


மேலும், மாநிலங்கள் அளவில் மொழிவாரியிலான கட்சிகள் அதிகமாக இருப்பாதாகவும், தாய்மொழிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம் தருவது அத்தகைய கட்சிகளுக்குப் பயன் தரும் எனவும் கூறியுள்ளார். 


தேசிய புதிய கல்விக் கொள்கையில் இருந்து பல்கலைக்கழகங்கள் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்து அமல்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ள ஜே.என்.யூ துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட், `தேசிய கல்விக் கொள்கை என்பது வெறும் ஆவணம் மடுட்மே.. யார் மீது திணிக்கப்பட்ட பொருள் அல்ல. அதில் நல்லவற்றை நாம் அனைவரும் எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன்’ எனக் கூறியுள்ளார். 


ஜே.என்.யூ துணைவேந்தர் சாந்திஸ்ரீ துலிபுடி பண்டிட் தொடர்ந்து ஜே.என்.யூ என்பது அதிகளவில் அரசியல்மயப்பட்ட கல்வி நிறுவனம் எனக் கூறியுள்ளதோடு, `90 சதவிகித மாணவர்களுக்கு அரசியல் ஆர்வம் இல்லை.. வெறும் 10 சதவிகிதம் பேர் மட்டுமே தொந்தரவு செய்யக் கூடியவர்கள்’ எனக் கூறியுள்ளார். மேலும் அரசியலை விரும்பும் மாணவர்கள் வெளியிள் சென்று தேர்தலில் போட்டியிட வேண்டும் எனக் கூறியுள்ளார்.