மாநிலங்களவை சீட்டில் ஒன்று தனக்குதான் என்றிருந்த அதிமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையாளர் சந்திப்பாளராக இதுநாள் வரை செயல்பட்டு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு ஏமாற்றமே பரிசாக கிடைத்திருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் ராயபுரத்தில் முடிசூடா மன்னனாக இருந்த நான் தோன்றேன் என்று வெளிப்படையாக பேசிய அவர், மீண்டும் பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டு வைத்ததால் சில நாட்கள் பேசவே முடியாமல் அமைதியாய் போனார்.

உறுதிக் கொடுத்த அதிமுக தலைமை ஏமாற்றியதா?

இந்நிலையில், ஜெயகுமாரிடம் சமாதானம் பேசிய அதிமுக சீனியர்கள் சிலர், காலியாகும் எம்.பி. சீட்டில் இரண்டில் ஒன்று உங்களுக்குதான் என்பதை உறுதிப்பட சொல்லி வந்தனர். அதனால், மீண்டும் செய்தியாளர்கள் மத்தியில் தோன்றிய ஜெயகுமார், வழக்கத்திற்கு மாறாக அடக்கியே வாசிக்க தொடங்கினார்.

மீனவ சமூகத்தை சேர்ந்தவர் என்பதன் அடிப்படையிலும், எடப்பாடி பழனிசாமிக்காக ஊடகங்களிடமும் சமாளித்தவர் என்ற அடிப்படையிலும், பாஜகவால் தன்னுடைய தொகுதியில் தான் தோற்றதாலும் தனக்கு எம்.பி. சீட்டை எடப்பாடி பழனிசாமி கொடுத்துவிடுவார் என்ற மிகப்பெரிய நம்பிக்கையில் இருந்த ஜெயகுமாருக்கு அதிமுக தலைமை அறிவித்த அறிவிப்பு பேரிடியாக வந்திறங்கியுள்ளது. இதனால், சற்று கலங்கியேபோய்விட்டார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டனர் என்று உணர்ந்துள்ள ஜெயகுமார் கடும் அப்செட்டில் இருப்பதாகவும், அடுத்த கட்ட நகர்வுகள் பற்றி அவர் ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

முகம் தெரியாதவருக்கு எம்.பி. சீட்டா? முட்டுக் கொடுத்ததற்கு இதுதான் பரிசா?

இன்பதுரையாவது அதிமுகவின் வழக்குகளை நடத்தி வரும் ஊரறிந்த நபர். ஆனால், முன்னாள் எம்.எல்.ஏவான தனபாலை பெரிதாக யாருக்கும் தெரியாது. ஆனால், அப்படியான நபருக்கு எம்.பி. சீட் கொடுத்துவிட்டு, தன்னை எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டிவிட்டதாக ஜெயகுமார் குமுறியுள்ளதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமியுடன் தோளுக்கு தோள் நின்ற ஜெயகுமாரை, அவர் என்ன முடிவு எடுத்தாலும் அதனை லாவகாமாக ஊடகங்களிடம் பேசி சமாளித்து எடப்பாடி பழனிசாமியின் முடிவுகளை காப்பாற்றிய ஜெயகுமாரை அதிமுக தலைமை நம்ப வைத்து கழுத்தை அறுத்துவிட்டது என்று அவருடைய ராயபுரம் தொகுதி ஆதரவாளர்கள் தற்போது கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர்.

பாஜகவை கூட்டணியில் வைத்துக்கொண்டு மீண்டும் ஜெயகுமார் ஜெயிக்க முடியுமா ?

எம்.பி. சீட் இல்லையென்றாலும் வரும் 2026 தேர்தலில் ஜெயக்குமாருக்கு ராயபுரத்தில் சீட் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டாலும் கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்ததால்தான், அவருக்கு அந்த தொகுதியில் முக்கியமாக இருக்கும் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காமல் போனது. அந்த விரக்தியிலேயே ஜெயகுமார் பாஜகவை கடுமையாக சாத்து, சாத்து என சாத்தியிருந்தார். மீண்டும் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் என்ன சொல்லி வாக்கு கேட்பது என்று ஜெயகுமாருக்கே புரியவில்லை என்றும் மீண்டும் தோற்றால் தனக்கு மட்டுமில்லாமல் தன்னுடைய மகனான முன்னாள் எம்.பி. ஜெயவர்தனுக்கும் அரசியல் எதிர்காலம் கேள்விகுறியாகிவிடும் என்பதை ஜெயகுமார் உணர்ந்திருக்கிறார்கள் என்கிறார்கள்.

என்ன முடிவு எடுக்கப்போகிறார் ஜெயகுமார்

திமுகவை பொறுத்தவரை சென்னையின் தளபதிகளாக சேகர்பாபு மற்றும் மா.சுப்பிரமணியன் என்ற அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதிமுகவை பொறுத்தவரை அவர்களுக்கு டஃப் கொடுக்க வேண்டுமென்றால் அது ஜெயகுமாரால் மட்டுமே முடியும். ஆனாலும், அதை உணராத அதிமுக தலைமை அவரை ஒரங்கட்ட்டி வருவதாகவும், இதனால் தன்னுடைய அரசியல் எதிர்காலத்திற்கான முக்கிய முடிவை ஜெயகுமார் விரைவில் எடுப்பார் என்றும் பரபரப்பு தகவல் வெளியாகிவருகிறது.

யார் காலிலும் விழுந்ததில்லை - ஜெயகுமார்

சில நாட்களுக்கு முன்னர் பேசிய ஜெயகுமார், பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் தான் போய் நின்றதில்லை, என்றும் யார் காலிலும் விழுந்ததில்லை என்றும் கடுமையாக பேசியிருந்தார். அதோடு, பதவி என்பது தன்னை பொறுத்தவரை ஒரு ‘கர்சீப்’ என்று அவர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.