VP Jagdeep Resign: குடியரசு துணை தலைவராக இருந்த ஜெகதீப் தன்கருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என பாஜக தலைமையிலான அரசை காங்கிரஸ் சாடியுள்ளது.

ஜெகதீப் தன்கர் ராஜினாமாவும்.. கேள்விகளும்..

குடியரசு துணை தலைவர் பதவி வகித்து வந்த கெஜதீப் தன்கர், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று அறிவித்தார். உடல்நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார். ஆனால், “ இந்த ராஜினாமா முடிவில் ஏதோ அரசியல் உள்ளது, பாஜகவில் நிலவும் உட்கட்சி மோதல், கட்சி சார்பில் வழங்கப்பட்ட அழுத்தம் மற்றும் கட்சியின் சில தலைவர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி” காரணமாகவே ஜெகதீப் தன்கர் இந்த முடிவை எடுத்ததாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

நட்டா, ரிஜிஜு ஆப்செண்ட்

காங்கிரஸ் எம்.பி., ஜெய்ராம் ரமேஷ் தனது விரிவான சமூக வலைதள பதிவில் சில முக்கிய கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், “நேற்று நண்பகல் 12.30 மணியளவில் மாநிலங்களவையில் குடியரசு துணை தலைவர் தலைமையில் நடைபெற்ற வணிக ஆலோசனைக் குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் நட்டா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்ட பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்றனர். விரிவான விவாதங்களுக்குப் பிறகு குழு ஆலோசனை மீண்டும் மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆலோசனைக்கு மீண்டும் 4.30 மணிக்கு குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் கூடினர். நட்டா மற்றும் ரிஜிஜுவின் வருகைக்காக, அவையின் தலைவர் உள்ளிட்ட அனைவரும் காத்திருந்தோம், ஆனால் அவர்கள் வரவே இல்லை.

மூன்றைரை மணி நேரத்தில் நடந்தது என்ன?

மிகவும் ஆச்சரியமளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால் நட்டா மற்றும் ரிஜிஜு ஆலோசனைக் கூட்டத்திற்கு வரமாட்டார்கள் என தன்கருக்கு தனிப்பட்ட முறையில் தெரிவிக்கப்படவே இல்லை. இதனால் மனமுடைந்த தன்கர் ஆலோசனைக் கூட்டத்தை அடுத்த நாள் (ஜுலை.22) பிற்பகல் 1.00 மணிக்கு ஒத்திவைத்தார். இதன் மூலம், நேற்று நண்பகல் 1 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் ஏதோ ஒன்று தீவிரமாக நடந்துள்ளது. இதன் காரணமாகவே திட்டமிட்டு நட்டா மற்றும் ரிஜிஜு ஆகியோர் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அதன் விளைவாகவே தன்கர் ராஜினாமா எனும் அதிர்ச்சி அளிக்கக் கூடிய முடிவை எடுத்துள்ளார். உடல்நல குறைபாடு காரணமாக ராஜினாமா செய்வதாக தன்கர் தெரிவித்துள்ளார். அதை நாம் மதிக்க வேண்டும். ஆனால், உண்மை என்றால் இதில் ஆழமான சில காரணங்கள் உள்ளன.

”அவமதிக்கப்பட்ட ஜெகதீப் தன்கர்?”

2014ம் ஆண்டிற்கு பிறகான இந்தியாவை தன்கர் எப்போதும் பாராட்டுவார். அதேநேரம், விவசாயிகளின் நலனுக்காக அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். பொதுவாழ்வில் வளர்ந்து வரும் ஆணவப் போக்கையும் விமர்சித்தார். நீதித்துறையை விமர்சித்த தன்கர்,  நீதித்துறையில் நம்பகத்தன்மை மற்றும் கட்டுப்பாடு தேவை என்பதை வலியுறுத்தினார். தற்போதைய பாஜக ஆட்சியிலும், எதிர்க்கட்சிகளுக்கு முடிந்தவரை இடம் கொடுக்க முயன்றார். விதிகள், நடைமுறைகள் மற்றும் மேடை மரியாதையை பின்பற்றுபவராக இருந்தார். ஆனால், அவரது பதவிக்கான மரியாதை தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்ததை அவர் உணர்ந்தார். இந்நிலையில் அவரது ராஜினாமா முடிவு தன்கரை பற்றி நிறை சொல்கிறது. அதேநேரம், அவரை குடியரசு துணை தலைவர் பதவிக்கு உயர்த்தியவர்களின் நோக்கங்கள் குறித்தும் இது கடுமையான கேள்விகளை எழுப்புகிறது” என ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார்.

இதனால், உண்மையிலேயே உடல்நலக்குறைபாடு காரணமாக தான் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தாரா? அல்லது அரசியல் காரணங்களால் இந்த முடிவை எடுத்தாரா? என்ற சந்தேகம் பொதுமக்களிடையேயும் எழ தொடங்கியுள்ளது.