EPS On BJP TVK Vijay: தொண்டர்களை குஷிப்படுத்த ஆட்சியில் பங்கு என, பாஜகவினர் பேசி வருவதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி நச் பதில்கள்:
அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். பாஜக உடனான கூட்டணி, திமுக மீதான குற்றச்சாட்டுகள் என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த சுற்றுப் பயணத்தின் போது பேசி வருகிறார். இந்நிலையில் தான், தனியார் ஊடகத்திற்கு எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். அதில், தேர்தல் வியூகம், கூட்டணியை பலப்படுத்துவது மற்றும் திமுகவின் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
கூட்டணி ஆட்சியா?
பாஜக தலைவர்கள் சொல்வதை போன்று தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி அமையுமா? என்ற கேள்விக்கு, “தொண்டர்களை உற்சாகப்படுத்தவே தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என அவர்கள் கூறிவருகின்றனர். அதையெல்லாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. அதேநேரம் பாஜக - அதிமுக கூட்டணி உடையாது, அதற்கான முயற்சிகளும் பலனிக்காது. எங்கள் கூட்டணியில் எந்த முரண்பாடும் இல்லை” என எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
பாஜகவிற்கு பதிலடியா?
தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா கூறிய நிலையில், அதற்கு நாங்கள் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமி பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில், “ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கூறவில்லை. அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என திமுக கூட்டணி கட்சிகள் கூறி வந்ததற்கு பதிலளிக்கவே அப்படி பேசினேன்” என எடப்பாடி தெரிவித்துள்ளார்.
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி
2026ம் ஆண்டு தேர்தல் குறித்த கேள்விக்கு, “2026 சட்டசபை தேர்தலிலும் அதிமுக தலைமையில் ஒற்றைக்கட்சி ஆட்சி தான் அமையும். அந்த அரசு மக்களின் எண்ணத்தின்படி அமையும். தமிழ்நாட்டில் ஒற்றைக்கட்சி ஆட்சியைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். இதுவரை தமிழகத்தில் ஒற்றைக் கட்சிதான் ஆட்சியமைத்துள்ளதாகவும், அடுத்த தேர்தலிலும் இதுவே தொடரும்” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விஜய், சீமானுக்கு அழைப்பு:
கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பான கேள்விக்கு, “திமுகவை வீழ்த்த வேண்டும் என நினைக்கும் கட்சிகள் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டும். ஒத்த கருத்துடைய கட்சிகள் தங்களது கூட்டணிக்கு வரலாம் என்பது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கும் பொருந்தும். ஆனால், கூட்டணி தொடர்பாக விஜய் கட்சியுடன் பேச்சுவார்த்தை ஏதும் நடத்தவில்லை” என எடப்பாடி விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் வருவாரா?
விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு எடப்பாடி அழைப்பு விடுத்தாலும், தாங்கள் திமுக கூட்டணியிலேயே தொடர்வோம் என அறிவித்துள்ளன. இந்நிலையில் தான், பாஜக உள்ள கூட்டணியில் நாங்கள் இடம்பெறமாட்டோம் என திட்டவட்டமாக கூறிய, தவெகவை தங்கள் கூட்டணிக்கு வர எடப்பாடி அழைப்பு விடுத்துள்ளார். இது சாத்தியமாகுமா? தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ளதால், கூட்டணியில் ஏதேனும் அதிரடி மாற்றங்கள் ஏற்படுமா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.