புரட்சி பாரதம் கட்சித் தலைவர் ஜெகன் மூர்த்தி செங்கல்பட்டு மதுராந்தகத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, தற்போது அதிமுக கூட்டணியில் இருப்பதாகவும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து, ஜனவரி மாதம் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
புரட்சி பாரதம் பொதுக்கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில், சட்டமன்ற உரைகள் சாதனை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஜகன் மூர்த்தி கூறியதாவது: சட்டமன்றத்தில் என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து இந்த பொதுக்கூட்டம் வாயிலாக மக்களுக்கு எடுத்துக் கூறியிருக்கிறோம். மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் அடிப்படை பிரச்சனைகள், மதுராந்தகம் மட்டும்தன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மக்கள் வீட்டு மனை பட்டாக்கள் கூட இல்லாமல் இருக்கின்றனர். பஞ்சமி நிலத்தை மீட்டு மக்களுக்கு கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
கூட்டணி குறித்து ஜனவரியில் முடிவு
விஜய் தலையில் மூன்றாவது அணி உருவாகுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், இப்பொழுது வரை நாங்கள் அதிமுக கூட்டணியில்தான் இருந்து வருகிறோம். எங்கள் கட்சியுடைய பொதுக்குழு ஜனவரி மாதம் நடைபெற உள்ளது பொதுக்குழுவில் நாங்கள் தீர்மானம் நிறைவேற்றுவோம். பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அன்று பொதுக்குழு உறுப்பினர்கள் யாருக்கு அதிக ஆதரவு தருகிறார்களோஒ? அந்த கூட்டணி செல்வதாக முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
5 சீட்டுகள் கேட்போம்
அதிமுகவுடன் கூட்டணி தொடர்ந்தால் அதிக சீட்டு கேட்பீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசுகையில், பொதுக்குழு முடிவுக்குப் பிறகு யாருடன் கூட்டணி செல்வோம் என்பதை முடிவெடுப்போம். இன்று வளர்ந்து இருக்கிற விதம், பலமாக இருக்கிறோம் நாங்கள் எந்த கட்சியுடன் கூட்டணிக்கு சென்றாலும் கண்டிப்பாக 5 சீட்டுகள் கண்டிப்பாக கேட்போம் என தெரிவித்தார்.
திருமாவளவன் கூட்டணியை விட்டு வெளியே வந்தால் பாஜகவிற்கு தீபாவளி என தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்து பேசிகையில், தீபாவளி மற்றும் தமிழருக்கு சம்பந்தமே கிடையாது. தீபாவளிக்கும் பட்டியல் இன மக்களுக்கும் சுத்தமாக சம்பந்தம் கிடையாது. திமுக கூட்டணி உடையும் என்பது நன்றாக தெரியும். ஜனவரி மாதத்திற்குள் திமுக கூட்டணி உடைய பொறுத்திருந்து பாருங்கள்.
திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படும்
விஜய் சொல்லி இருக்கிறார் எவ்வளவு சீட் வேண்டும் நான் தருகிறேன். மந்திரி சபையில் இடம் கொடுப்பதாக கூறியிருக்கிறார். பெரிய கட்சி வந்தால் துணை முதலமைச்சர் கொடுக்கிறேன் என்று சொல்கிறார் ஏன் போக மாட்டார்கள் ?. திமுக கூட்டணியில் 20 சீட் கேட்டேன் ஆனால் 6 சீட்டு தான் கொடுத்தார்கள் என ஒரு கட்சிக்காரர் கூறுவார். நீங்கள் என்ன எனக்கு கூட்டிக் கொடுப்பது எனக்கு, விஜய் இடம் இருக்கிறது என போய்விடுவார்கள். திமுகவில் இருக்கும் அனைத்து கட்சிகளும் கூடுதல் சீட் வேண்டும் என கேட்கிறார்கள்.
திமுக கூட்டணிக்கு பாமகவிலிருந்து ஒரு பிரிவு வருவதாக கூறுகிறார்கள். தேமுதிகவும் திமுக கூட்டணிக்கு வருவதாக கூறுகிறார்கள். இவ்வளவு பேர் வரும்போது திமுகவில் எப்படி சீட் கொடுக்க முடியும்?. எல்லோருக்கும் சீட் கொடுத்துவிட்டு திமுக என்ன 100 சீட்டு இல்லையா போட்டியிடும். 100 சீட்டில் போட்டியிட்டால், நான்தான் முதலமைச்சர் என்று எப்படி அவர்களால் சொல்ல முடியும் என தெரிவித்தார்.