கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கினை விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக ஓபிஎஸ் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் ஓபிஎஸ் அணிசார்பாக கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி மற்றும் அமமுக பொருளாளர் எஸ்.கே.செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதனிடையே கொடநாடு குற்றவாளி பிடித்துவிட்டதாக கருப்பு துணி அணிந்த நபரை எடப்பாடி பழனிசாமி என அழைத்து வந்து நூதனமுறையில் நாடகம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.



இதனைத் தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பெங்களூர் புகழேந்தி பேசுகையில், ”கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதா கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. ஆனால் அந்த சமயத்தில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அந்த இடத்திற்கு சென்று பார்க்கவில்லை, மேலும் ஜெயலலிதாவை தெய்வம் என்று கூறிவரும் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த பங்களாவிற்கு போலீஸ் பாதுகாப்பு கூட போடவில்லை. இந்த கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறி ஏழு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இன்று வரை குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை, கடந்த அதிமுக ஆட்சியின்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் அவர்கள், அப்போதைய ஆளுநரை சந்தித்து கொடநாடு வழக்கை விசாரித்து குற்றவாளிகளை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், கொலையின் பின்னணியில் எடப்பாடி பழனிசாமி இருப்பதாக கூறியிருந்தார். இதில் நடவடிக்கை இல்லையென்றால் குடியரசுத் தலைவரை சந்தித்து புகார் அளிப்போம் என்றும் கூறியிருந்தார். ஆனால் தற்போது ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. கொலை, கொள்ளைக்காரர்கள் சுதந்திரமாக நடமாடவிட்டது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.



மேலும், “ஓபிஎஸ் மீது ஒரு புகார் இருக்கிறது என்று கூறினால் கூட, இப்போது மேடையில் இருந்து நாங்கள் இறங்கிசெல்ல தயாராக இருக்கிறோம். அவர் செய்த தவறு மௌனமாக இருந்ததும் சொன்ன இடங்களில் கையெழுத்திட்டதும் தான் தவறு, பிரதமர் மோடி கூறியதை ஏற்று துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்றது. அதன் பின்னர் கொள்ளைக்காரர்கள் கொள்ளை அடிக்க அதுவே காரணமாக அமைந்தது. அப்போதும் ஓபிஎஸ் முதல்வர் பதவியில் இருந்து இறங்கமாட்டேன் என்று தர்மயுத்தம் செய்திருந்தால் ஒன்றும் செய்திருக்க முடியாது. இன்றையதினம் முதலமைச்சராக இருந்திருப்பார். இதனை கெடுத்தது பாரத பாரதிய ஜனதா கட்சி தான். நாங்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா வழி வந்தவர்கள் எங்களுக்கும் பிஜேபிக்கும் சம்பந்தமும் இல்லை. பாஜக எப்போது எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்தீர்களோ. நீங்கள் மதித்தால், நாங்கள் மதிப்போம். நீங்கள் மிதித்தால் நாங்களும் மிதிப்போம்” என்றும் பேசினார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சுதந்திர போராட்ட தியாகி. மொழி போராட்டத்திற்காக ஜெயிலுக்கு சென்றாரா? என்றும் கேள்வி எழுப்பினார்.