தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 6-ந் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று காலை திடீரென தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை, அண்ணாநகர் வேட்பாளர் மோகன் ஆகியோரது வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, திருவண்ணாமலை தி.மு.க. வேட்பாளர் எ.வ.வேலு வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. இதுதொடர்பாக, வி.சி.க. தலைவர் திருமாவளவன் இன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,


“ஆளும் கட்சிகளான அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் தேர்தல் தோல்வி பயத்தில் இன்றைக்கு தி.மு.க.வை அதன் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருமுகமாகத்தான் ஸ்டாலினின் மகள் செந்தாமரை, மருமகன் இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அச்சுறுத்தலுக்கு தி.மு.க.வும், தி.மு.க. கூட்டணிக் கட்சிகளும் ஒருபோதும் பணியாது. இத்தகைய அச்சுறுத்தல் நடவடிக்கைகளால் தி.மு.க.வின் பணிகள் பின்தங்கிவிடும் என்று எண்ணினால் அவர்கள் எண்ணம் ஏமாற்றத்தில் தான் முடியும்.




தமிழ்நாட்டு மக்கள் இத்தகைய போக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் உரிய பாடத்தை அவர்கள் கற்பிப்பார்கள். இவ்வாறு அச்சுறுத்தும் போக்கை அவர்கள் கைவிட வேண்டும். இந்தப் போக்கை  வன்மையாகக் கண்டிக்கிறேன்.


அ.தி.மு.க. அதன் கூட்டணியினர் எவ்வளவு தாராளமாக பணப் புழக்கத்தைச் செய்கிறார்கள் என்பதை, தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறது. மத்திய அரசும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள இதுபோன்ற வருமான வரித்துறை சோதனைகள் செய்யும் துறைகளுக்கு இது தெரியாமல் இல்லை. ஆனால், 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இல்லாத எதிர்க்கட்சியினர் வீட்டில் போய் ரெய்டு செய்வது மிக மோசமான அநாகரிகமான ஒரு நடவடிக்கை. இதனால் தி.மு.க.வின், தி.மு.க. கூட்டணிகளின் வெற்றி ஒருபோதும் பாதிக்காது”.


இவ்வாறு அவர் கூறினார்.