தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 69ஆவது பிறந்தநாளை திமுகவினர் பல்வேறு பகுதிகளில் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட படூர் முதல் நிலை  ஊராட்சியில் திமுக சார்பில் சிறப்பு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ லியோனி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன்,  தமிழக முதல்வர் மாறி தானாக வளர வேண்டும். மருத்துவர் ராமதாஸின் மகன் அன்புமணி, ராமதாஸுக்கு செல்ப்பு எடுக்கவில்லை. தானா உழைத்து முன்னேறினால் செல்ப்பு எடுத்து இருக்கும். பிள்ளையார் புடிக்கிற மாதிரி புடித்து வைத்ததால் செல்ப்பு எடுக்க வில்லை. மூப்பனார் தனது மகனை உருவாக்கினார். இப்பொழுது ஜி.கே வாசனும் காணவில்லை என பேசினார்.



இதனையடுத்து உரையாடிய தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கூறுகையில், முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற உடனே கொரோனா வைரஸ் தொற்றை விரட்டியடித்தார். அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை அறிவித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் வழங்கிய முதல்வர் முக ஸ்டாலின் . கல்யாணம் முடிந்து பத்து மாதத்தில் தான் பிள்ளை பிறக்க முடியும், 2 மாதத்தில் பிள்ளை கேட்பது சரியா? இப்படி தான் இருக்கிறது அதிமுக கேட்கும் கேள்விகள். அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு டவுசர் ரெடி, ஒருவர் சிறைச்சாலைக்கு சென்று விட்டார். ஜெயக்குமார் ஒரு மழை தவளை; தவளை கத்துவதால்தான் பாம்பிடம் சிக்கும்  என்பதை அறியாமல் கத்திக்கொண்டே இருக்கும் அதேபோல ஜெயக்குமார் பேசிக் கொண்டிருந்ததால் ஜனநாயகம் என்ற பாம்பு அவரை கொத்திச் சென்று விட்டது.  இனி ஒவ்வொருவராக சிறைக்கு செல்வார்கள்.




திரளான திமுகவினர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், திருப்போரூர் ஒன்றிய பெருந்தலைவர் இதயவர்மன்,  ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் 69ஆவது பிறந்தநாளை நினைவு கூறும் வகையில், 69 அடி கொடி கம்பத்தில் திமுக கொடி ஏற்றப்பட்டது.