கட்சி,கொடி,சின்னம் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன் என புதுச்சேரி மேற்கு மாநில அதிமுக செயலாளர் ஒம்சக்தி சேகர் உறுதி அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கட்சியில் பிளவு ஏற்பட்டு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் அமைதி காத்திருக்க நான் விரும்பினேன். அதற்கு எதிர் மாறாக புதுச்சேரி கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் என் பகுதி பொதுக்குழு உறுப்பினர்களை விலை பேசினார். கட்சிக்கு சோதனை காலம் வந்த போதெல்லாம் அன்பழகன் ஆதாயம் பெற்றுக் கொண்டு பல அணிகளுக்கு தாவினார். ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரச்சினை வந்த போது ஜானகி அணிக்கு சென்றார். 2016ல் ஜெயலலிதா மறைவுக்கு பின் சசிகலாவின் தலைமையை ஏற்றார்.


ஆனால் நாங்கள் ஜெயலலிதா இறந்த பிறகு ஜெயலலிதாதான் கட்சியின் நிரந்த பொது செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றினோம். சசிகலா பொது செயலாளராக பதவியேற்ற போது உங்களை ஏற்க மாட்டோம் என கூறியதால் கட்சியிலிருந்து விடுவித்தனர். ஓபிஎஸ்தர்மயுத்தம் தொடங்கிய போது அன்பழகன் சசிகலா பக்கம் சென்றார். அடுத்து டிடிவி தினகரன் குழுவினர் புதுச்சேரி விடுதியில் தங்கிய போது அன்பழகன் அவரை சந்தித்து ஆதரித்தார். எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்க்கு ஆதரவு தராமல் டிடிவி.தினகரனை ஆதரித்தார். கட்சி ஒருங்கிணைந்த போது மீண்டும் இணைந்து பிரமாண பத்திரங்களை அளித்தார். ஆனால் நான் இருக்கும் இடத்தில்தான் கட்சி இருந்தது. நான் கட்சி, கொடி, சின்னம் இருக்கும் இடத்தில்தான் இருக்கிறேன். இருப்பேன். ஓ.பி.எஸ்-இ.பி.எஸ். இருவரும் இணைந்து பேசி ஒற்றை தலைமை யார் என அறிவித்தால் நல்லது.




கட்டாயப்படுத்தி ஒற்றை தலைமை கொண்டு வர முடியாது என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கருத்து தெரிவித்தேன். ஒற்றை தலைமை வரும்போது அன்பழகன் கட்சியில் இருக்க மாட்டார். ஓபிஎஸ் மனைவியின் அஸ்தியை வைத்து பூஜை செய்த அன்பழகன் தற்போது அவரின் படத்தை கிழித்தது ஏன்? கட்சியும், சின்னமும் இருக்கும் இடத்தில் தான் நான் இருப்பேன். அதிமுகவை திமுகவிடம் காட்டிக் கொடுக்க மாட்டேன். அதிமுகவை கைப்பற்ற 4 பேர் முயற்சிக்கின்றனர். கட்சி, கொடி, சின்னம் யாரிடம் இருக்கிறதோ அங்குதான் நான் இருப்பேன். நீதிமன்றமும், தேர்தல் ஆணையமுமே கட்சி தலைமை யார் என முடிவு செய்ய வேண்டும். ஜூலை 11-ந் தேதி பொதுகுழு கூட்டத்திற்கு அழைப்பு வந்தால் செல்வேன். ஆனால், பொதுக்குழு நடைபெறுமா.? என்பது சந்தேகமாகவே உள்ளது என தெரிவித்தார்.



மேலும் இதுதொடர்பாக, புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசியல் முதலீடு செய்து லாபம் பெறக்கூடியது அல்ல. புதுச்சேரி அதிமுக மேற்கு மாநிலத்தை சேர்ந்த 11 பொதுக்குழு உறுப்பினர்கள் என் முன்னிலையில் கையெழுத்திட்டனர். அதுமட்டுமின்றி முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். கட்சியின் தலைமைக்கு 4 பேர் போட்டியிடுகின்றனர். வெற்றி பெறுபவர்கள் தலைமையை ஏற்பேன் என அதிமுக புதுச்சேரி மேற்கு மாநிலச் செயலர் கூறுவது அழகா நான் எடப்பாடி பழனிசாமியை உறுதிப்பட ஆதரிக்கிறேன்.


அதேபோல மற்றவர்கள் யாரை ஆதரிக்கிறேன்? என சொல்வார்களா? மேற்கு மாநிலத்தில் 65 சதவீதத்தினர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிக்கின்றனர். நான் ஒரே கட்சியில் விசுவாசமாக பணியாற்றுகிறேன். மேற்கு மாநில செயலாளர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இரட்டைத் தலைமை தான் வேண்டும் என்றார். ஆனால் இன்று ஓபிஎஸ், ஈ.பிஎஸ், சசிகலா, தினகரன் ஆகிய நான்கு பேரில் யார் தலைமை என்றாலும் அவர்களை தலைவராக ஏற்றுக்கொள்வேன் என்கிறார். நான் வியாபாரி இல்லை, அரசியல்வாதி நாங்கள் ஓபிஎஸ்ஐ நீக்கிவிட்டோம். எனவே இங்கு அவருக்கு ஆதரவாளர்கள் தானாகவே விலகி விடுவார்கள். ஓபிஎஸ்-ன் பினாமி தான் ஓம்சக்தி சேகர் என்று விமர்சித்துள்ளார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண



Published at : 27 Jun 2022 01:40 PM (IST)