பாஜக மூத்த தலைவரும் கர்நாடகா முன்னாள் முதல்வருமான பி.எஸ்.எடியூரப்பாவின் உரையைப் புகழ்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. கர்நாடக சட்டப்பேரவையில் பி.எஸ்.எடியூரப்பா தான் தீவிர அரசியலிலிருந்து விடுபடுவதாக நெகிழ்ச்சியான உரையாற்றினார்.


அந்த உரையை சுட்டிக் காட்டியுள்ள பிரதமர் மோடி, ஒரு பாஜக தொண்டனாக இந்த உரை மிகவும் உத்வேகம் அளிப்பதாக இருப்பதை உணர்கிறேன். இதுதான் எங்கள் கட்சியின் பண்பு. எடியூரப்பாவின் உரை நிச்சயமாக நாட்டில் உள்ள மற்ற பாஜக தொண்டர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என்றார். எடியூரப்பா பேச்சு அடங்கிய வீடியோவையும் அவர் ட்வீட்டில் இணைத்துள்ளார்.


அதற்கு பி.எஸ்.எடியூரப்பாவும் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி அவர்களே உங்களின் அன்பு வாழ்த்துகளுக்கு நன்றி. மோடியின் தலைமையின் கீழ் கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் இன்னும் அதிகமான பலத்துடன் உத்வேகத்துடன் வேலை செய்வார்கள் என்று பதிவிட்டுள்ளார்.






எடியூரப்பா அப்படி என்ன செய்தார்? 


இதுதான் இந்த அவையில் எனது இறுதி உரை. நான் இனி இந்த சட்டப்பேரவைக்குள் நுழைய மாட்டேன். நான் ஏற்கெனவே இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துவிட்டேன். இருப்பினும் எனது இறுதி மூச்சு வரை கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். இந்தத் தேர்தலில் மட்டுமல்ல இறைவன் ஆசி அளித்தால் அடுத்தவரும் தேர்தல்களிலும் கட்சி வெறிக்காகப் பாடுபடுவேன். நான் 4 முறை முதல்வராக இருந்துள்ளேன். வேறு யாருக்கும் இத்தகைய வாய்ப்பு இங்கு கிடைத்ததில்லை.


அதற்காக நான் பிரதமர் நரேந்திர மோடிக்கு என்றும் நன்றியுடன் இருப்பேன். எடியூரப்பாவை யாரும் எப்போதும் அமைதியாக்கிவிட முடியாது. நாங்கள் மீண்டும் கர்நாடகாவில் ஆட்சி அமைப்போம். தேர்தலை ஒட்டி நான் மாநிலம் முழுவதும் ஒரு பிரச்சார பயணத்தை மேற்கொள்ளவுள்ளேன். நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பின்னர் மாநிலம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். பாஜகவின் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைப்பேன். தற்போது கர்நாடகாவில் ஆட்ச்யில் உள்ள பாஜக அரசு வேறு யாரும் அளித்திடாத அளவிற்கு மக்கள் நலத் திட்டங்களை தந்துள்ளது என்றார்.





;எடியூரப்பாவின் அரசியல் பயணம்


லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த எடியூரப்பா தனது தேர்தல் வெற்றி வாழ்க்கையை சிவமோகா மாவட்ட புரசபா தலைவராகி தொடங்கினார்.
1967ல் எடியூரப்பா மைத்ரதேவி என்ற பெண்ணை கரம் பிடித்தார். அவருக்கு ராகவேந்திரா, விஜயேந்திரா என இரு மகன்களும், அருணா தேவி, பத்மாவதி, உமாதேவி என 3 மகள்களும் உள்ளனர். 
1983ல் முதன்முதலில் ஷிகாரிபுராவில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வானார். அதே தொகுதியில் 8 முறை வென்றுள்ளார்.
1994ல் அவர் கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
1999ல் அவர் பாஜகவால் கர்நாடக மேலவைக்கு நியமிக்கப்பட்டார்.
2004ல் அவர் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவரானார்.
2007, 2008, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் அவர் கர்நாடக முதல்வராக இருந்திருக்கிறார்.
கர்நாடக பாஜகவில் வலுவான தலைவராக இருந்தாலும் அவர் அங்கு ஒருமுறை கூட ஐந்து ஆண்டுகளை முழுமையாக ஆட்சி செலுத்தவில்லை.
எடியூரப்பா பசவன்னாவின் தீவிர தொண்டர்.