Bihar Election 2025: ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளர் பட்டியலில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லாதது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பில்லை
பீகார் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக - ஐக்கிய ஜனதா தளம் தலா 101 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அதன்படி, முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள 57 வேட்பாளர்களில் ஒரு இஸ்லாமியர் கூட இல்லாதது அதிருப்தியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடும் விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியலில் இஸ்லாமியர்கள் பெயர்கள் இடம்பெறும் என நிதிஷ் குமார் ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
சமூக வாக்களுகளுக்கு முக்கியத்துவம்
நிதிஷ்குமாரின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், 30 புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சமூகம் சார்ந்த வாக்கு வங்கிக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஒன்பது குஷ்வாஹாக்கள், 10 குர்மிகள், மூன்று யாதவர்கள் மற்றும் ஒரு பனியா என ஓபிசி பிரிவைச் சேர்ந்த 23 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மிகப்பெரிய வாக்கு வங்கியாக கருதப்படும் பட்டியல் பிரிவில் இருந்து 9 பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆறு பூமிஹார்கள், ஐந்து ராஜபுத்திரர்கள் மற்றும் இரண்டு பிராமணர்கள் என உயர் சாதியினரில், 13 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
ஆதரவு தராத மைனாரிட்டீஸ்
2020 சட்டமன்றத் தேர்தலில், ஜே.டி.(யு) 115 இடங்களில் 11 முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தியது, அவர்களில் யாரும் வெற்றி பெறவில்லை. 2024 மக்களவைத் தேர்தலில், கட்சி கிஷன்கஞ்சிலிருந்து முஜாஹித் ஆலமை நிறுத்தியது, அவர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இந்த நிலையில் தான் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ஒரு இஸ்லாமியர் பெயர் கூட இடம்பெறவில்லை. கட்சித் தலைவர்களின் சில சமீபத்திய கருத்துகள் மற்றும் பாஜக கூட்டணியில் இருப்பதன் விளைவாக, இஸ்லாமியர்களுக்கு வாய்ப்பளிப்பதில் இருந்து நிதிஷ்குமார் பின்வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
நிதிஷ் தரப்பு தலைவர்களின் அதிரடி கருத்துகள்:
2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, மத்திய அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் லாலன் முசாபர்பூர் பேரணியில் பேசுகையில், “முதலமைச்சர் நிதிஷ் குமார் பல திட்டங்களை முன்னெடுத்த போதிலும், சிறுபான்மை சமூகங்கள் அவரை ஆதரிக்கவில்லை” என்று கூறியிருந்தார். அதே நேரத்தில், சீதாமரி எம்பி தேவேஷ் சந்திர தாக்கூர், ”யாதவர்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கான இனி பணியாற்ற மாட்டேன்” என்று குறிப்பிட்டார். இது இஸ்லாமிய வாக்காளர்களுடன் நிதிஷ் குமாரின் உறவுகள் மோசமடைந்து வருவது குறித்த ஊகங்களைத் தூண்டியது. வக்ஃப் வாரியக் கூட்டத்தில் அவர் இல்லாதது விவாதத்தை மேலும் அதிகரித்தது.
2வது கட்டத்தில் வாய்ப்பு?
இந்த பதட்டங்கள் இருந்தபோதிலும், தேர்தலுக்கு முன்னதாக இஸ்லாமிய சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்வுகளில் முதலமைச்சர் சமீபத்தில் கலந்து கொண்டார். எனவே, இரண்டாவது கட்டத்திலாவது சிறுபான்மை மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை நிதிஷ்குமார் உறுதி செய்வாரா? அல்லது பாஜகவை போன்று செயல்படுவாரா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.