கோவையில் இபிஎஸ்.,யின் வலது கையான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருங்கியவரும், நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை மேற்கொண்டனர்.


அதேபோல், மற்றொரு புறம் இபிஎஸ்.,க்கு மிகவும் நெருக்கமானவரும், பிரபல நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தகாரர் செய்யாதுரைக்கு சொந்தமான மதுரை உள்ளிட்ட 8 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தினர். 


அதிமுகவில் இபிஎஸ்-ஓபிஎஸ் ஒற்றைத் தலைமை விவகாரம் நடந்து கொண்டிருக்கும் வேளையில், இன்று நீதிமன்றம் மூலம் இபிஎஸ்.,க்கு சாதமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், திடீரென இபிஎஸ்.,க்கு மிக நெருங்கிய இரு வட்டாரத்தில் வருமான வரி ரெய்டு நடந்திருப்பது இபிஎஸ்.,க்கு நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக உள்ளது.


யார் இந்த செய்யாத்துரை..? 


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர் செய்யாத்துரை. இவரும் இவரது மகன் நாகராஜனும் இணைந்து நடத்திவரும் எஸ்பிகே குழுமமானது, தமிழக அரசின் சாலை ஒப்பந்தப் பணிகள் மற்றும் கட்டுமானப் பணிகளைச் செய்து வருகிறது. இவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்மந்திக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.


கடந்த 2018-ம் ஆண்டு எஸ்.பி.கே குழுமத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையின்போது 150 கோடி ரூபாய் வரையிலான பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள நெடுச்சாலைத்துறை ஒப்பந்ததாரர் செய்யாத்துரையின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டனர்.


யார் இந்த சந்திரசேகர்..? 


கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் அதிமுக இளைஞரணியில் கோவை மாவட்ட துணைச் செயலாளராக இருந்து வருகிறார். மேலும் நமது அம்மா நாளிதழின் வெளியிட்டாளராகவும் இருந்து வருகிறார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவராக அறியப்படும், இவர் கடந்த அதிமுக ஆட்சிக் காலங்களில் பல்வேறு அரசு ஒப்பந்தங்களை எடுத்து செய்துள்ளார். இவரது மனைவி சர்மிளா சந்திரசேகர் கோவை மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார்.


இந்நிலையில் வடவள்ளி பகுதியில் உள்ள சந்திரசேகர் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சந்திரசேகரின் தந்தை வீடு உள்ளிட்ட 6 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்திரசேகர் வீட்டில் காலை 11 மணி முதல் 5 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண