நேற்று நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சியினரின் ஒற்றுமையை பாஜக முற்றிலுமாக உடைத்துள்ளது. எதிர்கட்சியை சேர்ந்த பல எம்எல்ஏக்கள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான திரௌபதி முர்முவுக்கு வாக்களித்துள்ளனர்.  


கிட்டத்தட்ட 125 எம்எல்ஏக்கள், 17 எம்பிக்கள் கட்சி மாறி வாக்களித்திருப்பதாக கூறப்படுகிறது. குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹா தோல்வி பெற்றதையடுத்து, பாஜக முதலமைச்சர்களான சிவராஜ் சிங் சவுகான், ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் 'மனசாட்சியின்படி' வாக்களித்த எதிர்கட்சி எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.


ஒரு உறுப்பினர் கூட இல்லாத கேரள சட்டப்பேரவையில், திரௌபதி முர்முவுக்கு ஒரு எம்எல்ஏவின் வாக்கு கிடைத்திருக்கிறது. இதில் கவனிக்க தக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கேரளாவில் இடதுசாரி தலைமையிலான ஆளும் கூட்டணியும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சியினர் கூட்டணியும் யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.


தேர்தலில் பதிவான வாக்குகளில், திரௌபதி முர்மு 64 சதவீத வாக்குகளைப் பெற்றார். யஷ்வந்த் சின்ஹாவுக்கு சுமார் 36 சதவீத வாக்குகள் கிடைத்தன. அஸ்ஸாமில் 25 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்திருக்கின்றனர்.


இதுகுறித்து அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்விட்டர் பக்கத்தில், "126 உறுப்பினர்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டப்பேரவையில் பாஜக கூட்டணிக்கு 79 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால், அதை விட அதிகமான வாக்குளை திரௌபதி முர்மு பெற்றுள்ளார். அவருக்கு 104 வாக்குகள் கிடைத்துள்ளது. 2 பேர் வாக்களிக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் அதிபர் வேட்பாளர் மீது நம்பிக்கை வைத்து, இந்த வரலாற்று தருணத்தில் முழு மனதுடன் இணைந்த அஸ்ஸாம் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றி" என பதிட்டுள்ளார்.


அஸ்ஸாம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த மாநிலங்களவை தேர்தலின் போது, ​​ஆளும் பாஜக இரு இடங்களிலும் வெற்றி பெற்றது. அந்த சமயத்திலும், அங்கு எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்திருந்தனர். காங்கிரஸ் மற்றும் அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்ததாக இரு கட்சிகளும் பரஸ்பரம் விமர்சித்து கொண்டன.


மத்தியப் பிரதேசத்தில் திரௌபதி முர்மு 16 கூடுதல் வாக்குகளைப் பெற்றார். அவருக்கு 146 வாக்குகளும், யஷ்வந்த் சின்ஹா ​​79 வாக்குகளும் பெற்றனர்.
மேற்கு வங்கத்தில், பாஜகவுக்கு 69 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆனால் திரௌபதி முர்மு 71 வாக்குகளைப் பெற்றார். யஷ்வந்த் சின்ஹாவால் ​​தனது சொந்த மாநிலமான ஜார்கண்டில் கூட எதிர்க்கட்சி வாக்குகளை முழுவதுமாக பெற முடியவில்லை. அங்கு 81 எம்எல்ஏக்களில் 9 பேர் மட்டுமே அவருக்கு ஆதரவளித்தனர்.


மகாராஷ்டிராவில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 164 வாக்குகள் பெற்றார். இதுதான் பாஜக கூட்டணி வாக்குகளின் எண்ணிக்கை. ஆனால், குடியரசு தலைவர் தேர்தலில் 181 எம்எல்ஏக்கள் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்தனர்.


மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸின் சில எம்எல்ஏக்கள் மேகாலயாவில் கட்சி மாறி வாக்களித்தனர். மணிப்பூரில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளரை ஆதரித்தனர். பீகார் மற்றும் சத்தீஸ்கரில் இருந்து தலா 6 எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள், கோவாவில் இருந்து 4 பேர் மற்றும் குஜராத்தில் இருந்து 10 பேர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண