சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "திமுக ஆட்சிக்கு வந்து, 40 மாதமாகி விட்டது. 40 மாத ஸ்டாலின் ஆட்சியில் 2021 பொதுத் தேர்தலின் போது திமுக சார்பில் கொடுக்கப்பட்ட 525 வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. இதுவரை ஊடகத்திலும், சட்டமன்றத்திலும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியும் இதுவரை பதிலளிக்கவில்லை.
ஆனால் 98 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக பச்சைப்ப பொய் சொல்கிறார். மாணவர் வங்கிக்கடன் ரத்து, 100 நாள் வேலை திட்டம் 150 நாளாக உயர்த்தும் திட்டம், 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, ரேஷனில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகள் கூட நிறைவேற்றவில்லை என்றார்.
தமிழகத்தில் தினந்தோறும் ஏதாவது ஒரு இடத்தில் கொலை நடந்து கொண்டேதான் இருக்கிறது. பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் நடைபெறுகிறது. 20 நாட்களில் 6 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளது. இதை கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு கூட, பாலியல் வன்கொடுமைகள் தொடர்கிறது. இவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டத்திற்கு பிறகும் விழித்துக் கொள்ளாமல் திமுக அரசு கும்பகர்ணன் போல தூங்கிக் கொண்டிருக்கிறது. காவல்துறையை சுதந்திரமாக இயங்கி விட்டாலே போதும், குற்ற சம்பவங்கள் குறைந்து விடும். ஆனால் விடியா அரசாக திமுக அரசு உள்ளது.
போதைப் பொருள் பிரச்சினையை இரும்புக்கரம் கொண்டு அடக்காமல் மெத்தனமாக திமுக அரசு இருக்கிறது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் டன் கணக்கில் போதைப் பொருள் விற்பனையாகிறது. இனியாவது வேகமாக துரிதமாக கடுமையாக நடவடிக்கை எடுத்து போதைப் பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் மாணவர், இளைஞர்கள் எதிர்காலம் சீரழிந்து விடும். இதற்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தளவிற்கு தமிழக அரசின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியிருக்கிறது. இதற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த செய்தியில், ஆருயிர் சகோதரர் என குறிப்பிட்டு, வருக வருக என வரவேற்றும், தியாகம், உறுதி பெரிது என சொல்லியுள்ளார். தியாகம் என்ற சொல்லுக்கே மரியாதை இல்லாமல் போய் விட்டது. ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் ஒருவர் வெளியே வருகிறார் என்றால், முதலமைச்சர் தியாகம் என்று பாராட்டினால் தியாகத்தினுடைய மதிப்பு, மரியாதையே போய் விட்டது. தியாகம் என்று சொன்னால் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டு உயிர் நீத்தவர்களுக்குத்தான் அது பொருந்தும். அப்படிப்பட்ட சொல்லை ஊழல் செய்து சிறையில் அடைக்கப்பட்டு வெளியே வந்தவருக்கு குறிப்பிடுவது வெட்கக் கேடானது என்று கூறினார்.
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்த்துவோம் என்ற அறிவிப்பு கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே சொத்து வரி, குப்பை வரி போட்டு மக்கள் மேல் சுமத்தியுள்ள நிலையில், இந்த அறிவிப்பை கண்டிக்கிறோம். விரைவில் குடிநீர் வரியும் உயர்த்தி விடுவார்கள் என மக்கள் சந்தேக்கின்றனர். இந்த அறிவிப்பை திமுக அரசு திரும்ப பெற வேண்டும்.
செந்தில் பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கினால் அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்சியையும் மக்கள் கண்காணித்து வருகிறார்கள். இந்த ஆட்சி எப்படி நடக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்கள் விழிப்புணர்வுடன் கவனித்து கொண்டிருக்கிறார்கள். செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சரானால், தேர்தல் நேரத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை மக்கள் செய்வார்கள். திமுகவில் மூத்த நிர்வாகிகள் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு தியாகப்பட்டம் கிடையாது. பல கட்சிக்கு போய் வந்தவருக்குத்தான் தியாகப்பட்டம் கிடைக்கிறது.
அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் ஒவ்வொரு மருத்துவமனையே கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இது ஊழலுக்கு வழிவகுக்கும். அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் இதுபற்றி விசாரிக்கப்படும். 11 மருத்துவக் கல்லூரிகளில் கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் செயல்பாடுகள் மோசமாக உள்ளன.அரசு சட்டக் கல்லூரிகளிலும் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. அதிமுக ஆட்சியில் மருத்துவத்துறையில் 35 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பபட்டன. திமுக ஆட்சியில் எல்லா துறைகளிலும் நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்துள்ளது. அதை சரி செய்ய திமுக அரசு தயாராக இல்லை. பொம்மை முதலமைச்சர் இருப்பதால் செயல்படாத அரசாக திமுக அரசு உள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. தேர்தல் நடந்தால் அதிமுக சந்திக்கும். தள்ளிப்போகுமா என்பது அரசின் கையில் தான் உள்ளது. அதிமுக உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது. வெளி மாநில கொள்ளையர்களை சுட்டுப் பிடித்த காவல்துறையினரை பாராட்டுகிறேன். இப்படி சுதந்திரம் கொடுத்தால், காவல் துறையினரின் செயல்பாடுகள் நன்றாக அமையும். ஆனால் திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை.
திமுக ஆட்சியில் தவறுகளை மறைப்பதற்காக பவள விழா பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி நடக்கவில்லை என்று குற்றம் சாட்டும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஏன் 2 ஆண்டுகளாக தலைவாசல் கால்நடை பூங்காவை திறக்கவில்லை. ஒரு செங்கல்லை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒரு லட்சம் செங்கல்லை கொண்டு கட்டப்பட்ட கால்நடை பூங்காவை திறக்காமல் முடக்கி இருப்பது விவசாயிகளுக்கு செய்யும் விரோதம் ஆகும்.
செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கினால், உச்சநீதிமன்ற நிபந்தனைப்படி காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திடுவது எப்படி சரியாக இருக்கும். ஒருவேளை நிபந்தனையை மீறி செந்தில் பாலாஜி செயல்பட்டால் அவர் மீது காவல் துறை எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.
முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது செந்தில்பாலாஜி குறித்து பேசிய வீடியோவை காண்பித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி செந்தில்பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் தியாகி என்று சொல்வது வெட்க கேடானது. திமுகவில் மூத்த அமைச்சர்கள் பலர் இருக்கும் போது செந்தில் பாலாஜிக்கு மட்டும் முதல்வர் முக்கியத்துவம் கொடுப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்றார்.