நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் பாளையங்கோட்டை ஜோதிபுரம் திடலில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம் மைதீன்கான் ஏற்பாட்டில், தலைமை செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான ஏ.எல்.எஸ்.லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகரி பாராளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி பேசும்போது, "ஒரு தலைவருக்கு நூற்றாண்டு விழா வரும்போது கட்சியும், ஆட்சியும் சிறப்பு செய்யும் பெருமையை கலைஞர் மட்டுமே பெற்று இருக்கிறார். வேறு எந்த தலைவருக்கும் இந்த பெருமை இல்லை. பல்வேறு தலைவர்களின் வரலாற்றை படித்துள்ளேன். ஆனால் பன்முகத்தன்மை கொண்ட கலைஞரைப் போல் உலகில் வேறு எந்த தலைவரையும் பார்த்ததில்லை. களப்பணி, கருத்துப்பணி, இலக்கியம், மொழி பணி என தனித்துவம் வாய்ந்த தலைவராக திகழ்ந்தவர் கலைஞர். அண்ணாவால் கூட அகில இந்திய அரசியலில் கால் பதிக்க முடியவில்லை. கலைஞர் அதிலும் கால் பதித்தார். வங்கிகளை தேசிய மயமாக்கியது, இலவச மின்சாரம் வழங்கியது, பெண்களுக்கு சொத்துரிமை கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு பெருமைகளுக்கு சொந்தக்காரர் கலைஞர் மட்டும் தான். கலைஞர் அண்ணா காலத்திலிருந்து இன்றுவரை திராவிடம் என்றால் ஹிந்திக்காரர்களுக்கு பிடிக்காது. பாஜகவினரிடம் கொள்கை இல்லை, அவர்கள் மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். கொள்கை, சித்தாந்தம் உள்ளிட்டவைகள் கொண்ட ஒரே இயக்கம் திமுக என்பதால் பாஜகவினர் நம்மை கண்டு பயப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நபர்களையும் உயர் நீதிமன்ற நீதிபதியாக்கிய பெருமை கலைஞருக்குத் தான் உண்டு.
எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது கலைஞரின் பதவியை பறிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் நடவடிக்கை எடுத்தார். கலைஞரின் பேனா வைக்க வேண்டிய வழக்கை உச்சநீதிமன்றத்தில் கூட நாங்கள் ஜெயித்து விட்டோம். பேனா வைக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். தற்போது அவர் பெருநிலக்கிழார் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அவரிடமிருந்த இடத்தை விட தற்போது 500 ஏக்கர் நிலத்திற்கும் கூடுதலாக கொள்ளையடித்து வைத்திருக்கிறார். அவரை போன்ற விவசாயிகளின் விவசாய நிலத்திற்கு மின்சாரம் வழங்க உத்தரவிட்டதே கலைஞருடைய பேனா தான். கலைஞரின் திட்டமில்லாமல் யாரும் தமிழகத்தில் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. கலைஞரின் பேனா பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் கவுண்டர் சமுதாயத்தை சேர்க்கவில்லை என்றால் அண்ணாமலை ஆடு மேய்த்திருப்பார், எடப்பாடி பழனிசாமி வெள்ளமண்டி வைத்திருப்பார், வானதி சீனிவாசன் கூடை வேய்ந்திருப்பார். அம்பேத்காரால் கூட பெண்களுக்கு சமூக உரிமை கொடுக்கும் சட்டத்தை கொண்டுவர முடியவில்லை. கலைஞர் அந்த சட்டத்தை 1989இல் இந்தியாவிற்கு வழிகாட்டும் விதமாக தமிழகத்தில் அந்த சட்டத்தை கொண்டு வந்தார். உலகத் தமிழர்கள் யாரும் பெற்றிடாத இடத்தை கலைஞர் பெற்றுள்ளார். பிரதமர் மோடி ஆட்சியை அகற்றியே தீருவேன் என சொல்லிக் கொண்டிருக்கும் நாட்டின் ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் மட்டும் தான். உலகத்திலேயே மிகப்பெரிய ஊழலை அதானி செய்துள்ளார், அதனை ஹிண்டன் பார்க் அறிக்கை சொல்கிறது. அந்த அறிக்கையை யாராலும் மறுக்கக்கூட முடியவில்லை, தேசத்தின் சொத்தை அதானி அபகரித்துள்ளார். இதுகுறித்து பேசாமடந்தையாக இருக்கும் ஒரே தலைவர் பிரதமர் மோடி. இதுவரை அவரை போன்ற ஒரு அரசியல் தலைவரை கண்டதில்லை.
அரசு விமானத்தில் அதானியை அழைத்துச் சென்று வெளிநாடுகளில் ஒப்பந்தத்தை வாங்கி கொடுத்தவர் பிரதமர் மோடி. ஏமாற்று பேர்வழியாக அதானி திகழ்கிறார். தொடர்ந்து இந்த விவகாரத்தில் பிரதமரும் அமைதி காத்து வந்தால் அவரும் ஏமாற்று பேர் வழிதான் என்று நான் சொல்வதில் தவறு இருந்தால் என் மீது வழக்கு தொடரட்டும். மோடிக்கு தைரியமும், துணிச்சலும், மனவலிமையும் இருந்தால் அதானி விவகாரம் தொடர்பாக வாய் திறந்து பேசட்டும். இந்தியப்படை வீரர்கள் 48 பேர் பாகிஸ்தான் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் மோடிக்கு தேச பக்தி வந்து விட்டது. எப்போது எல்லாரும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் ராணுவ வீரர்களை கொன்று விடுகிறார்கள். உலகத்தின் தலைவர் விஸ்வகுரு என சொல்லப்படும் மோடி மீது அப்போது கவர்னராக இருந்த சத்திய பால் மாலிக் புல்வாமா தாக்குதல் குறித்து பல்வேறு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். உயர் அதிகாரிகள் அனைவரும் எனது வாயை அடைத்து விட்டார்கள் என அவர் தெரிவித்தார். தேர்தலுக்காக ராணுவ வீரர்களை கொன்றுவிட்டு 2019ல் ஆட்சிக்கு பாஜக வந்தது. பாஜக ஊழல் மட்டுமல்ல மதவாதத்தை வைத்தும் அரசியல் செய்கிறது. சுதந்திர போராட்டத்திற்கு போராடிய இஸ்லாமியர்களின் பெயர்களை மத்திய பாஜக அரசு மறைக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என ஆளுநர் ரவி சொல்கிறார். மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பதை அவர் பார்க்க வேண்டும். பாஜக அரசில் மோடியின் அருகே இருக்கும் மத்திய அமைச்சரின் வீடு மணிப்பூரில் சூறையாடப்படுகிறது. இப்படி எல்லாம் நடக்கும் மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. தமிழகத்தில் கெட்டுவிட்டது என ஆளுநர் தொடர்ந்து சொல்லி வருகிறார். பாராளுமன்றத்தில் அதானி குறித்தும் பிபிசி குறித்தும் பேசுவதற்கு மம்தா கட்சியினர் கூட தயாராக இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் அது குறித்து பேசுவதற்கு தைரியம் கொடுத்த ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான். மதவாதமும், ஊழலும் கைகோர்த்துவரும் மோடியின் ஆட்சியை எதிர்கொண்டு ஒழிப்பதற்கு மகத்தான ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான்” என அவர் தெரிவித்தார்.
முன்னதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசுகையில், “பாஜக யாருடன் கூட்டணி வைத்தாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். அண்ணாமலை நடந்தல்ல உருண்டே வந்தாலும் தமிழகத்தில் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாது. மக்கள் திமுக பக்கம் உள்ளனர், திமுக ஆட்சியின் மீது எந்த குற்றச்சாட்டும் இந்த இரண்டு ஆண்டுகளில் சொல்ல முடியவில்லை. இரட்டை இலைக்கு இனி ஓட்டுவிழாது. அது எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தோடு முடிந்து விட்டது. ராமநாதபுரம் மட்டுமல்ல யார்(பாஜக) எந்த இடத்தில் நின்றாலும் அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள். தமிழகத்தில் திராவிட இயக்கத்திற்கு வேறு தலைவர்கள் இல்லை. தற்போதைய முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான் இருக்கிறார். அடுத்தது உதயநிதி இருக்கிறார். தமிழகத்தின் தயவு இல்லாமல் இனி மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நாட்டின் அடுத்த பிரதமரை முதல்வர் ஸ்டாலின்தான் முடிவு செய்வார்” என தெரிவித்தார். தொடர்ந்து திமுக மூத்த நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.