மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் கூட இல்லாத நிலையில், அரசியல் களம் ஏற்கனவே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும், பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், மூன்றாவது முறையாக வென்று ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது.
கடந்த இரண்டு தேர்தல்களிலும், பாஜக வெற்று பெறுவதற்கு உத்தர பிரதேசம், பிகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களே காரணம். மேல்குறிப்பிட்ட இந்த மாநிலங்களில், 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகளில் பாஜகவே வெற்றிபெற்றது.
அண்ணாமலையின் திடீர் பயணம்:
ஆனால், இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சிக்கு எதிரான மன நிலை, பிகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உருவாகியுள்ள புதிய கூட்டணி ஆகியவை பாஜகவுக்கு சவால் விடும் வகையில் உள்ளது. எனவே, இந்த மாநிலங்களில் ஏற்படும் இழப்பை தென் மாநிலங்களிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் வெற்றிபெற்று சரிகட்ட பாஜக முயற்சித்து வருகிறது.
இந்த சூழலில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி செல்லும் அண்ணாமலை பாஜக தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாஜகவின் தலைமை அலுவலகத்தில் அதன் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டாவை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். தமிழ்நாட்டின் அரசியல் கள நிலவரம், ஆளுநர் - தமிழ்நாடு அரசு மோதல் விவகாரம், கூட்டணி உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பக்கா பிளானுடன் வேலை செய்யும் பாஜக:
மக்களவை தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் பணிகள் குறித்து அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் வரும் 28ஆம் தேதி "என் மண் என் மக்கள்" என்ற பெயரில் அண்ணாமலை மேற்கொள்ள உள்ள 200 நாட்கள் பாதயாத்திரை தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, தமிழ்நாட்டில் 9 தொகுதிகளை குறிவைத்து வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. அடுத்தாண்டு மக்களவை தேர்தலில், தென் சென்னை, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், வேலூர், சிவகங்கை, ஈரோடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட பாஜக மேலிடம் விரும்புவதாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மற்ற தொகுதிகளை காட்டிலும் தென் சென்னை தொகுதியை கேட்டு பெற்று விட வேண்டும் என்பதில் பாஜக குறியாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவேதான், தென் சென்னை தொகுதி பாஜக தலைவர்களிடம் அமித் ஷா சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்.