முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி, வக்கீல் அய்யப்பமணி ஆகியோர் சேலம் எஸ்.பி ஸ்ரீ அபிநவ்விடம் புகார் மனுவை கொடுத்தனர்.
அந்த மனுவில், "சேலம் மாவட்டம் நிலவாரப்பட்டியில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த அதிமுக நிகழ்ச்சியில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது தமிழகத்தை ஒரு முதல்வர் ஆட்சி செய்யவில்லை. முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன், மருமகன், மனைவி ஆகிய 4 பேர் ஆட்சியை நடத்துகிறார்கள். முதல்வருக்கு ஒன்றும் தெரியாது என்று சட்ட விரோதமாக கூறியுள்ளார். இந்த பேச்சு ஜனநாயகத்துக்கு விரோதமானது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் தேர்வு பெற்ற முதல்வர் பதவியை அசிங்கப்படுத்தி இருக்கிறார். அரசியல மைப்பு சட்டத்திற்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் இந்த பேச்சு அமைந்துள்ளது. அதனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், "என்று கூறியுள்ளார். மனுவை பெற்ற எஸ்.பி, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பி வைத்தார்.
இதையடுத்து எஸ்பி அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது. தமிழகத்தை 4 முதல்வர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். இது சட்டவிரோத பேச்சாகும். கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது, ஒருமுறையாவது அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் துணைவியாரை பற்றியோ, குடும்பத்தாரை பற்றியோ பேசியது இல்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி மிகவும் அநாகரீகமாக தற்போது நடந்து கொண்டுள்ளார். இது ஒரு தேச துரோக பேச்சு. இதுவே, நம் நாட்டை 4 பிரதமர்கள் ஆள்கிறார்கள் என எடப்பாடியால் பேச முடியுமா? அடுத்த நாளே அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனை எடப்பாடி வீட்டில் நடக்கும்.
அதிமுக கட்சியின் பதிவு சின்னம் கேள்விக் குறியாக இருக்கிறது. இரட்டை தலைமை மீது புகார் கொடுப்பேன். தற்போது கூடும் பொதுக்குழு சட்டவிரோதமானது. சசிகலாவிற்கு துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி, ஒ.பன்னீர்செல்வம் சுயமரியாதையை இழந்தவர் பாஜக தலைமையில் இருந்து வரும் உத்தரவுபடி அதிமுக பொதுக்குழு நடக்கிறது. ரவுடிகளை வைத்து நடத்துவார்கள். அதிமுக முதுகில் ஏறி சவாரி செய்தே பாஜக 4 எம்எல்ஏக்களை பெற்றார்கள். ஆனால், தற்போது எதிர்க்கட்சி என பேசிக்கொள்கிறார்கள். தமிழகத்தில் தற்போது எதிர்கட்சி அதிமுக தான். ஆனால், அவர்கள் பாஜக கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள். பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு ஜோக்கர். அவர் ஐபிஎஸ் என்பதே சந்தேகம். தனியாக பாஜக போட்டியிட்டால் ஒரு இடத்தில் கூடவெல்ல முடியாது. தமிழகத்தில் நடக்கும் திடாவிட மாடல் ஆட்சியை அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சியை போல் பார்க்கிறேன். பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டு தமிழகத்திற்கு இன்னும் இத்தனை கோடி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு தர வேண்டும் என்பதை தைரியமாக எடுத்துரைத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார். இது தான் திராவிடம். இதுபோல் வேறு யாராலும் பேசிட முடியாது.