நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் தமிழக காங்கிரஸ் கமிட்டி பொருளாளரும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ரூபி மனோகரன் வருகை புரிந்தார். அப்போது நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்புள்ள இந்திரா காந்தி மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய வருவதாக தகவல் வந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தை பூட்டிவிட்டு நிர்வாகிகள் அங்கிருந்து வெளியேறினர். இதனை அடுத்து தனது ஆதரவாளருடன் வந்த எம்எல்ஏ ரூபி மனோகரன் காமராஜர் மற்றும் இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு பூட்டியிருந்த அலுவலகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார்.




அப்போது பேசிய அவர், "இது போன்ற நிகழ்ச்சிகள் காங்கிரஸ் கட்சியில் மட்டுமின்றி அனைத்து கட்சிகளிலும் நடப்பது சகஜம் தான். அதே போன்று  ஒரு சிறு தவறு நடைபெற்றது. அசம்பாவிதம் என்றே சொல்லலாம். அதை பொது வெளியில் விமர்சித்து சொல்ல நான் விரும்பவில்லை. யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். நியாயமான கோரிக்கைக்கு எனது தொகுதி கட்சி உறுப்பினர்கள், கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்றார்கள். அவர்கள் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பது தொடர்பாக தேசிய தலைவர் கார்கேவிடம் புகாராக தெரிவித்துள்ளோம். இந்த பிரச்சனைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தொகுதி மக்கள் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு வந்தார்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.




காங்கிரஸ் கட்சி இன்று தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை பெற்றுள்ளது.  நாங்குநேரி தொகுதியில் மட்டுமல்ல  திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் இயக்கம் பலமாக உள்ளது. ராகுல் காந்தியின் நடைபயணம் இன்று கிராமம் கிராமமாக பேசப்படுகிறது. சத்தியமூர்த்தி பவன் என்பது காங்கிரஸ் கட்சிக்காரர்களுக்கு கோவிலை போன்றது.கோவிலுக்கு செல்லும் போது கத்தியை யாராவது எடுத்து செல்வார்களா? இன்று எனக்கு ஒழுங்கு நடவடிக்கை குழுவில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டி இருந்தது. தொகுதியில் பல்வேறு பணிகளுக்காக முன்கூட்டியே திட்டமிட்டு இருந்ததன் காரணமாக ஒழுங்கு  நடவடிக்கை குழு முன்பு ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு கடிதம்  அனுப்பி உள்ளேன். என் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுங்கள். கட்சி அலுவலகத்திற்கு அடியாட்கள் வந்திருக்கலாம்.நிச்சயமாக கட்சிக்காரர்கள் யாரும் சக கட்சிக்காரர்களை தாக்கி இருக்க மாட்டார்கள். குண்டர்கள் தாக்கியிருக்கலாம். உட்கட்சி விவகாரம் நிச்சயமாக பேசி முடிவெடுக்கப்படும். நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் எனக்கு நல்ல நண்பர் அவரோடு இணக்கமாக செயல்பட்டு இருக்கிறேன்" என தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்...