நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சமாதானபுரத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர் கூறும் போது, "தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கின்றனர். தற்போது பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முட்டை வழங்கப்படுவதால் முட்டையின் விலை ஏழு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் என கூறினர்.  தமிழகத்தில் திமுக ஆட்சி வந்த உடனே 100 நாட்களில் அரசு மதுபானம் இல்லாத மாநிலமாக திகழும் என தேர்தல் வாக்குறுதியில் திமுக கட்சி தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது அரசு மதுபான கடைகள் மூடுவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் இளம் விதவைகள் அதிகமாக ஆகிக்கொண்டே இருக்குது என்பது தொடர்பாக அரசு கணக்கீடு செய்ய வேண்டும்.


ஸ்டெர்லைட், சாத்தான்குளம் உள்ளிட்ட  பிரச்னைகளில் காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் பிரச்னையில் சாதாரண காவலர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. உடனடியாக இந்த சம்பவத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். தென் தமிழகத்தில் சமீபகாலமாக ஜாதிய படுகொலை அதிகரித்துள்ளது.  ஒரு சில காவல்துறை அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டு இருந்தாலும், பல்வேறு காவல் நிலையங்களில் செயல்படும் காவலர்கள் அதிகமாக லஞ்சம் வாங்கிக் கொண்டு பணக்காரர்களுக்கு மட்டும்தான் உதவி செய்கிறார்கள். ஏழை எளிய மக்கள் காவல் நிலையத்திற்கு செல்ல முடியாத அவல நிலை தான் தற்போது நிலவி வருகிறது. திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்கள். பொதுமக்களும் திமுகவின் போலியான வாக்குறுதிகளால் ஓட்டு போட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் மூத்த அமைச்சர் ஐ பெரியசாமிக்கு எதிராக ஒரு கருத்தை பேசி உள்ளார். ஐ.பெரியசாமி கருணாநிதி காலத்தில் இருந்து அமைச்சரவையில் இருந்தவர். ஆனால் இவர் சிறியவர்தான். இவர் ரேஷன் கடைக்கு கூட சென்றது கிடையாது.


தொடர்ந்து திமுக அமைச்சர்கள் எதை வேண்டுமானாலும் பேசிக் கொண்டு வருகிறார்கள். இவர்களை கட்டுப்படுத்த தமிழக முதலமைச்சர் தவறிவிட்டார். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிர்வாகத் திறமை இல்லை என்பது தான் இதனை காட்டுகிறது. இரவில் கூட தூங்க முடியவில்லை என்று அவரே வெளியே தெரிவித்து வருகிறார். ஆனால் கடந்த காலங்களில் மாண்புமிகு அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது ஏதாவது ஒரு அமைச்சர் தவறு செய்தால் அவர் மறுநாள் காலையில் அமைச்சர் பதவிலேயே இருக்க மாட்டார். அது போன்ற நிர்வாகத் தன்மை கொண்ட ஒரே முதலமைச்சராக ஜெயலலிதா திகழ்ந்தார் என்று தெரிவித்தார்.


மேலும், தமிழகத்தில் கஞ்சா விற்பனை என்பது அதிகமாக காணப்படுகிறது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள், காவலர்களுக்கு தெரியாமல் கஞ்சா விற்பனை செய்ய முடியாது. எந்த எந்த காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது என்பதை ஆராய்ந்து அங்குள்ள காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.  பட்டியல்  இனத்திலிருந்து வெளியேற கையெழுத்து இயக்கம் வருகிற 30-ஆம் தேதியும், பட்டியலின வெளியேற்றத்தை வலியுறுத்தி வரும் 2023 ஜூலை 2ல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில்,  மாநில மாநாடு 2023 அக்டோபர் 9ம் தேதி பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்ற கோரிக்கை நடைபயணம் கன்னியாகுமரி முதல் சென்னைக்கு செல்ல இருக்கிறேன்  என தெரிவித்தார்..