Continues below advertisement

சூடு பிடிக்கும் தேர்தல் களம்

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் இறுதியில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு ஏற்ப அரசியல் கட்சிகளின் தேர்தல் பணிகள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஆளுங்கட்சியான திமுகவை வீழ்த்த அதிமுக திட்டம் வகுத்து செயல்படுத்தி வருகிறது. இதற்கான திமுகவிற்கு எதிரான எதிர்ப்பு வாக்குகள் பிரியக்கூடாது என்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டுள்ளார். இதற்காக பாஜகவை தங்கள் அணியில் முதல் கட்சியாக இணைத்த அதிமுக, அடுத்ததாக பாமகவையும் இழுத்துள்ளது. இதனையடுத்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இபிஸ் கொடுத்த லிஸ்ட்- ஓகே சொன்ன அமித்ஷா

இன்று இரவு கடலூரில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி தொடர்பாக முடிவு அறிவிப்பதாக பிரேமலதா தெரிவித்துள்ளார். இதனிடையே அதிமுக கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை தொகுதி ஒதுக்கீடு என்பது தொடர்பாக டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவர் அமித்ஷாவிடம் அலோசனை மேற்கொண்டார். அப்போது கூட்டணியில் இடம்பெறவுள்ள கட்சிகள், ஒவ்வொரு கட்சிகளுக்கும் ஒதுக்கப்படவுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக லிஸ்டை கொடுத்துள்ளார். இதற்கு அமித்ஷா ஓகே சொன்னதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

இபிஎஸ்யை சந்தித்த நயினார் நாகேந்திரன்

இந்த நிலையில் இன்று காலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது பாஜகவிற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் தாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளின் லிஸ்டையும் நயினார் நாகேந்திரன் கொடுத்துள்ளார். இது தொடர்பாக தொகுதி பங்கீட்டு குழுவோடு பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், பிரதமர் தமிழகம் வருகை குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் ஆலோசித்தோம். அதிமுக பாஜக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. பிரதமர் மோடி இந்த மாதம் இறுதியில் தமிழகம் வருகிறார். எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

அதிமுக கூட்டணி- எத்தனை தொகுதிகள் யாருக்கு.?

இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு 20 முதல் 23 தொகுதிகளும், பாமகவிற்கு 16 முதல் 18 தொகுதிகளும் ஒதுக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல அதிமுக கூட்டணியில் இடம்பெறும் எதிர்பார்க்கப்படும் தேமுதிக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டுவருகிறது. மேலும் டிடிவி தினகரனுக்கு 6 முதல் 8 தொகுதி வரை ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் அதிமுக 170 முதல் 175 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.