தலித் வீட்டில் டீ குடியுங்கள். அவர்களிடம் பாஜகவை எடுத்துச் சென்று நெருக்கமாகுங்கள் என பாஜக தொண்டர்களுக்கு முன்னிலையில் உத்தரப் பிரதேச பாஜக தலைவர் ஸ்வதந்தரா தேவ் சிங் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது


உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. நாட்டின் மிகப் பெரிய மாநிலம் என்ற வரிசையில் இங்கு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது. பாஜக 2014 முதல் 5 ஆண்டு காலம் முதல் ஆட்சியை முடித்து 2019ல் மீண்டும் மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில் மூன்றாவது முறையாகவும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அரியணையைத் தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ஒரு முன்னோட்டமாக உ.பி. தேர்தலை அத்தனை அரசியல் கட்சிகளும் எதிர்நோக்கியுள்ளன.


இந்நிலையில், அம்மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், கட்சித் தொண்டர்களுக்கு ஒரு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளார்.


"தலித்துகளுடன் நேரம் செலவழியுங்கள். அவர்களிடன் வாக்களிப்பு என்பது தேசியத்தின் அடிப்படையில் நடக்கிறதே தவிர பணம், பிராந்தியம், சாதி அடிப்படையில் நடப்பதில்லை என எடுத்துரையுங்கள். ஒவ்வொரு பாஜக தொண்டரும் குறைந்தது 100 தலித் வீட்டில் டீ அருந்த வேண்டும். அவர்களிடம் பாஜகவை கொண்டு செல்ல வேண்டும். ஒரு தலித் வீட்டில் உங்களுக்கு டீ கிடைத்துவிட்டது என்றால் அவர்கள் உங்களின் செயலுக்கு ஓகே சொல்கிறார்கள் என்று அர்த்தம். அந்த வீட்டில் உங்கள் தேநீருடன் முந்திரியும் கிடைத்தால் அவர்கள் உங்களை ஏற்றுக் கொண்டார்கள் என்று அர்த்தம்.


அவர்கள் வீட்டிற்கு நீங்கள் 10 நாட்கள் சென்றும் அவர்கள் உங்களை விரட்டினால், எப்படியாவது அங்கு ஒரு டீயாவது குடிக்க முயற்சி செய்யுங்கள். ஆயிரம் முறையாவது செல்லுங்கள். நீங்கள் அங்கே செல்லும் ஒவ்வொரு முறையும் கட்சி பலமாகும், நீங்கள் வலிமையான தலைவராவீர்கள். அதனால், நீங்கள் உங்கள் சுயசாதிக்காரர்களையும் சந்தியுங்கள், தலித்துகள் வீட்டிலும் தேநீர் அருந்துங்கள். ஒடுக்கப்பட்டவர்கள், சுரண்டப்பட்டவர்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள்" இவ்வாறு உத்தரப் பிரதேச பாஜக தலைவர் ஸ்வதந்தரா தேவ் சிங் தெரிவித்துள்ளார்.


உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த முறை பாஜகவுக்கு காங்கிரஸ் சவால்விடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரியங்கா காந்திக்கு ஓரளவு அங்கு வரவேற்பு இருப்பதால் காங்கிரஸ் அவரை வைத்துதான் காய் நகர்த்தும் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை அண்மையில் பிரியங்கா காந்தி சந்தித்தார். காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என இப்போதைக்கு கைவிரித்திருந்தாலும், பாஜகவை வீழ்த்த தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி கூட அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவும் சட்டப்பேரவைத் தேர்தல் வியூகத்தை வகுத்து வருகிறார்.