இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் வாங்காமலேயே பணிகள் மேற்கொண்ட போதிலும், மத்திய அரசு இத்திட்டத்திற்கு மத்திய-மாநில அரசுகளின் சம பங்களிப்போடு திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது என ஹெச்.ராஜா கூறினார்.
சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் , பாஜக மாநில ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா முன்னிலையில் எம்.ஜி.ஆர். மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
எம்.ஜி.ஆர். மக்கள் மன்றத் தலைவரான புகழேந்தி, அடிப்படையில் அதிமுக உறுப்பினராக இருந்து அதிமுக பிரிவிற்குப் பின்னர் ஜெ.தீபா அணியில் பணியாற்றி அதனைத் தொடர்ந்து தனியாக எம்.ஜி.ஆர். மக்கள் மன்றம் என்கிற அமைப்பைத் தொடங்கி செயல்பட்டு வந்த நிலையில் தற்போது எம்.ஜி.ஆர். மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் உடன் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதனையடுத்து பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்ட புகழேந்தி உள்ளிட்டோருக்கு பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா
அண்ணாவின் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிற அண்ணாவின் கூற்றில், அந்த ஒருவன் யார் என்பது தான் எனது கேள்வி. அதனை முதலில் தெளிவுப்படுத்த வேண்டும். இது மக்களை ஏமாற்றுகின்ற வேலை. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது திருமூலர் சொன்னது , அதனை அண்ணாவே சொல்லவில்லை.
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் - ஒப்புதல் வாங்கவில்லை
மத்திய அரசு ரூ.7020 கோடி கொடுக்கிறது என்றால் , மாநிலமும் ரூ.7020 கோடி கொடுக்கிறது. மீதமுள்ள பணம் நீண்ட கால கடன் மூலம் ஈடு செய்யப்படும். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மத்திய அரசை கேட்காமலே நீட்டிக்கப்பட்டது. ஒப்புதல் வாங்காமலே பணிகள் மேற்கொண்ட போதிலும், மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்ததோடு மத்திய மாநில அரசுகளின் சம பங்களிப்போடு திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கேட்டு விட்டு மாநில அரசு பணிகளை மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு கேட்காமலேயே மாநில அரசு நீட்டித்து தான் 2 ஆம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரேசன் கடைகளில் அரிசி , பருப்பு
அனைத்து ரேஷன் கடைகளிலும் கொடுக்கப்படும் அரிசி மற்றும் பருப்பு, மத்திய அரசின் முழு மானியத்தில் இருந்து கிடைக்கிறது என எழுதிப் போட வேண்டியது தானே. ஏன் அதனை செய்வதில்லை. பாஜக குறித்து உண்மைக்கு புறம்பாக பேசுவர்களை குறித்து பேசத் தயாரில்லை எனத் தெரிவித்தார்.