சேலம் மாநகர் கோட்டை மைதானத்தில் சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் ஆதிக்க இந்தி எதிர்ப்புத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை உரையாற்றிய தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ”தமிழக முதல்வர் அவசரமாக இந்திக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் (IIT) இந்தியை கொண்டுவர வேண்டும் என்ற முயற்சியை எதிர்ப்பதற்காக தான் தமிழக முதல்வரால் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. முதன்முதலில் இந்தியை கொண்டு வர முயற்சி மேற்கொண்டது முன்னாள் முதலமைச்சர் ராஜாஜிதான். ஹிந்தி என்ற பெயரிலே தமிழகத்தின் காலூன்ற நினைக்கிறார்கள். திமுக ஒன்றும் ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி அல்ல.



திமுக முதன் முதலில் தொடங்கியபோது ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா சொன்னார். கோவில் கூடாது என்று சொல்லவில்லை கொடியெல்லாம் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக கருணாநிதி படங்களில் வசனங்களாக எழுதினார். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது 500-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திய பெருமை உள்ளது.


கருணாநிதி ஆன்மீக எதிரானவர் அல்ல. 500 குடமுழுக்கு விழா, திருவாரூர் தேர் ஓடி இருக்காது. இதை வைத்து சில கட்சிகள் அரசியல் செய்யலாம் என்று எண்ணுகிறது. தமிழை வளர்த்தது 20, 21-ஆம் நூற்றாண்டில் திராவிட கழகத்தின் பெருமக்களால்தான் வளர்க்கப்பட்டது. தமிழை வளர்த்தியது பக்தி இலக்கியம். இரண்டாவது நூற்றாண்டில் சிலப்பதிகாரம், தேவாரம், திருவாசகம் திருப்புகழ் திருப்புகழ் ஆகிய பக்தி இலக்கியங்களை தமிழில்தான் படிக்க முடியும். எனவே ஆன்மீகத் தமிழையும் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இந்தி எதிர்ப்பு காண போராட்டம். இந்தியில் இரண்டு பிரிவுகள் சைவம், வைணவம். சைவத்தை பாதுகாத்து வளர்த்த 63 நாயன்மார்கள். 



வைணவத்தை காப்பாற்ற 12 ஆழ்வார்கள் இருந்தனர். திமுகதான் ஆன்மீக தமிழை காப்பாற்ற போகிறது. இந்தி என்பது தமிழுக்கு இணையான மொழியை அல்ல. தமிழ் பழமையான மொழி. நான்காயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ் மொழியை அழிக்க நினைப்பது எந்த விதத்தில் நியாயம். சென்னையிலிருந்து மதுரை, திருச்சி, சேலம், கோவை ஆகிய மாவட்டங்களுக்கு விமானத்தில் வந்தால் ஆங்கிலம் மற்றும் இந்தியில் தெரிவிக்கிறது. 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ்மொழி ஆட்சி மொழியாக மாற்ற மறுக்கப்படுவது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இந்தியை படித்துவிட்டு சென்று வெளிநாடுகளில் என்ன செய்ய முடியும்? தமிழக கலை உலகத்தையும் திமுகவையும் பிரித்துப் பார்க்க முடியாது.


தென்னக மாநிலங்களில் அந்தந்த தாய் மொழிகளை பாதுகாக்கவும், பேச வைக்கவும் அந்தந்த முதலமைச்சர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் குஜராத்தில் குஜராத்தியை இரண்டாவது நிலைக்கு மாற்றி விட்டு இந்திக்கு முன்னுரிமை கொடுத்துள்ளனர், பிரதமர் மோடியும், அமித் ஷாவும் என்பது வேதனைக்குரியது. வட மாநிலங்களில் இந்தியை படித்தவர்கள் தமிழகத்திற்கு வேலை தேடி வருகிறார்கள். தற்போது இந்த நிலைதான் உள்ளது. கொச்சைப்படுத்த சொல்லவில்லை.


எட்டு கோடி மக்களின் முகங்கள்தான் தமிழக முதல்வர், எட்டு கோடி மக்கள் முதல்வர் ஸ்டாலினுடன் உள்ளார்கள்" என உரையாற்றினார்.