இந்தியாவில் பொருளாதார சமத்துவமின்மையை மத்திய பாரதிய ஜனதா அரசு மேலும் விரிவுபடுத்தியுள்ளதாக எதிர்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.மேலும் நாட்டின் செல்வத்தில் 40 சதவிகிதத்திற்கும் மேலானதை 1 சதவிகிதப் பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள் அதே நேரம் 3 சதவிகித செல்வம் ,மக்களில் 50 சதவிகிதத்துக்கும் குறைவானவர்களிடம் உள்ளது என்றும் அந்தக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அந்தக் கட்சித் தலைவர்கள் சிலர் ட்வீட் செய்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பாரதிய ஜனதா கட்சி பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்தியுள்ளது, இதனால் சாமானியர்கள் தொடர்ந்து அந்தப் படுகுழியில் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்” எனக் கூறியுள்ளார்.
மேலும் "இந்தியாவில் உள்ள ஒரு சதவிகிதப் பணக்காரர்கள் நாட்டின் செல்வத்தில் 40 சதவிகிதத்திற்கும் மேல் தங்கள் வசம் வைத்துள்ளனர், அதேசமயம் மக்கள் தொகையில் பாதியிடம் வெறும் மூன்று சதவீதம் மட்டுமே உள்ளது, பாரத் ஜோடோ யாத்ரா என்பது பொருளாதார சமத்துவமின்மையினால் ஏற்பட்டிருக்கும் இந்த இடைவெளியை நிரப்புவதற்கான இயக்கம்" என்று அவர் கூறினார். யாத்திரை தொடர்பான தனது ட்வீட்டில் அவர் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கி பேசியுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மக்களின் வறுமையை அதிகரிக்கும் அரசின் இத்தகைய கொள்கைகளுக்கு எதிரான மக்களின் குரலாக பாரத் ஜோடோ யாத்ரா உள்ளது என்றார். அவர்,"70 கோடி இந்தியர்களை விட வெறும் இருபத்தி ஒரு கோடீஸ்வரர்களிடம் அதிக சொத்து உள்ளது. ஒரு சதவீத பணக்காரர்களிடம் இந்தியாவின் 40 சதவீத சொத்து உள்ளது" என்று தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்..
"ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 20 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமையில் இருந்து மீட்டது. மத்திய அரசின் கொள்கைகள் அவர்களை மீண்டும் வறுமையில் தள்ளி இருக்கிறது. பாரத் ஜோடோ யாத்ரா அரசாங்கத்தின் இந்தக் கொள்கைகளுக்கு எதிரான நாட்டின் குரலாக உள்ளது," என்று அவர் மேலும் கூறினார். மோடி அரசாங்கம் சிலருக்காக மட்டுமே செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.