'ஆப்கானிஸ்தானில் இருந்து தமிழகத்திற்கு ஹெராயின் இறக்குமதி' பகீர் கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர் ரவி!

பாகிஸ்தான் மற்றும் துபாயில் உள்ள ஒரு சிலருடன் இணைந்து ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஹெராயின் இறக்குமதி செய்வதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி குற்றம்சாட்டியுள்ளார்.

Continues below advertisement

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Continues below advertisement

இருப்பினும், திமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நெருக்கடி தந்து வருகிறார்.

தமிழ்நாட்டை உலுக்கிய கள்ளச்சாராய மரணங்கள்: 

வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் தொடர் கோரிக்கை வைத்து வருகின்றன. இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவியை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. கடந்த 19ஆம் தேதி, கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 150க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 60 பேர் உயிரிழந்துவிட்டனர்.

கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த நிலையில், போதைப்பொருள் விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் ரவி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 

அதிகாரிகளுக்கு எப்படி தெரியவில்லை?

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஹெராயின் இறக்குமதி செய்வதாக அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழ்நாடு ஆளுநர், "நான் தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு எண்ணற்ற பெற்றோர்கள் என்னிடம் வந்து, கல்லூரி மற்றும் பள்ளிகளில் உள்ள போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க வேண்டி கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து நான் அதிகாரிகளிடம் கேட்டால் இங்கு கஞ்சா மட்டுமே உள்ளது. மற்ற போதைப் பொருள்கள் இல்லை என கூறுகிறார்கள். ஆனால், பெற்றோர்கள் சிந்தடிக் ட்ரக்ஸ் (செயற்கையாக உருவாக்கப்பட்ட ரசாயனத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட போதை பொருள்) உள்ளது என கூறுகின்றனர்.

அவர்களுக்கு இந்த விஷயங்கள் தெரியும்போது, இங்கு இருக்கக்கூடிய அதிகாரிகளுக்கு தெரியாமல் உள்ளது.  முதலில் இங்கு போதைப் பொருள் இல்லை என்ற மனநிலையில் இருந்து நாம் வெளியே வரவேண்டும்.  இல்லையென்றால் வாழ்க்கை கேள்விக்குறியாகும்.

ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்தப்படும் ஹெராயின்:

விசாரணை மேற்கொண்டதில் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிலர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் உள்ள ஒரு சிலருடன் இணைந்து ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து ஹெராயின் இறக்குமதி செய்கின்றனர். மேலும் தமிழ்நாட்டை போதை பொருட்கள் பெரிய அளவில் பாதிக்கிறது.

சென்றாண்டு கள்ளச்சாராயத்தால் விழுப்புரத்தில் இருபதுக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த ஆண்டும் அதேபோல மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. போதைப் பொருட்கள் வெளியில் இருந்து வரவில்லை, இங்கேயே உருவாக்கப்படுகிறது" என்றார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola